133. திருக்கச்சியேகம்பம்
பதிக வரலாறு:
(சந்தர்ப்பம் தெரியவில்லை)
பண்: மேகராகக் குறிஞ்சி
பதிக எண்: 133
திருச்சிற்றம்பலம்
1427. வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி
நூலொருபால் பொருந்தக்
கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற்
கச்சி தன்னுள்
அந்தமில் குணத்தா ரவர்போற்ற
வணங்கினொ டாடல்புரி
எந்தை மேவிய வேகம்பந்
தொழுதேத்த விடர்கெடுமே. 1
_________________________________________________
1. பொ-ரை: அனலிடை நன்றாக வெந்த
வெண்மையான திருநீற்றைப் பூசியுள்ள மார்பின்கண்
விரிந்த பூணூல் ஒருபால் விளங்கித் தோன்ற,
மணங்கமழும் கூந்தலினையுடைய உமையம்மையோடும்,
விளங்கும் பொழில்களால் சூழப்பட்ட கச்சி
என்னும் தலத்துள் எல்லையற்ற குணங்களையுடைய
அடியவர்கள் போற்ற நடனம் செய்யும் எந்தையாகிய
சிவபெருமான் எழுந்தருளிய ஏகம்பம் என்னும்
திருக்கோயிலைத் தொழுது போற்ற நம் இடர் கெடும்.
கு-ரை: திருநீறு பூசிய திருமார்பிற்
பூணூல் கிடந்திலங்க, உமாதேவியோடு எழுந்தருளிய
கச்சியுள் எல்லையற்ற குணங்களையுடைய அடியார்கள்
போற்ற எந்தை மேவிய ஏகம்பம் தொழுதேத்த
இடர்கெடும் என்கின்றது.
அந்தம் - முடிவு. அணங்கினொடு -
பார்வதியோடு.
|