1428. வரந்திகழு மவுணர் மாநகர்மூன்
றுடன்மாய்ந் தவியச்
சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச்
சங்கரன் மேயவிடம்
குருந்த மல்லிகை கோங்குமா
தவிநல்ல குராமரவம்
திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ்
சேர விடர்கெடுமே. 2
1429. வண்ணவெண் பொடிப்பூசு மார்பின்
வரியர வம்புனைந்து
பெண்ணமர்ந் தெரியாடல் பேணிய
பிஞ்ஞகன் மேயவிடம்
விண்ணமர் நெடுமாட மோங்கி
விளங்கிய கச்சிதன்னுள்
திண்ணமாம் பொழில்சூழ்ந்த வேகம்பஞ்
சேர விடர்கெடுமே. 3
_________________________________________________
2. பொ-ரை: வரம்பெற்ற
அவுணர்களின் பெருநகராக விளங்கிய முப்புரங்களும்
ஒருசேர மாய்ந்து கெடுமாறு கணை எய்து எரித்தழித்த,
தாழ்ந்து தொங்கும் சடைகளையுடைய சங்கரன்
எழுந்தருளிய இடமாகிய, குருந்தம், மல்லிகை, கோங்கு,
மாதவி, நல்லகுரா, கடம்பமரம் ஆகியனவற்றால்
சிறந்து விளங்கும் பசுமையான பொழில் சூழ்ந்த
கச்சிமாநகரிலுள்ள திருஏகம்பத்தை அடைந்து தொழ,
நம் இடர்கெடும்.
கு-ரை: திரிபுரம் எரியச்
சரம்விட்ட சங்கரன் மேவிய இடமாகிய பொழில்
சூழ்ந்த ஏகம்பம்சேர, இடர்கெடும் என்கின்றது.
துரந்து - செலுத்தி. மாதவி - குருக்கத்தி. மரவம் -
வெண்கடம்பு
3. பொ-ரை: வெண்மைநிறம் அமைந்த
திருநீறு பூசிய மார்பின்கண் உடலில் வரிகளையுடைய
பாம்பை அணிந்து, உமையம்மையை விரும்பியேற்று,
சுடுகாட்டில் எரியாடல் புரியும் தலைக்கோலம்
உடையவனாகிய சிவபிரான் மேவிய இடமாகிய
விண்ணளாவிய நீண்ட மாட வீடுகள் ஓங்கி
விளங்குவதும், என்றும் நிலை பெற்ற பொழில்களால்
சூழப்பட்டதுமாகிய கச்சிமாநகரில் உள்ளதுமாகிய
திருஏகம்பத்தைச் சென்று வணங்க நம் இடர் கெடும்.
|