பக்கம் எண் :

204தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


82. திருப்பறியலூர்

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். மயிலாடுதுறை (செம்பொனார் கோயில் வழி) சங்கரன்பந்தல் செல்லும் பேருந்துகளில் பறியலூர் செல்லலாம். இப்பொழுது பரசலூர் என வழங்கும். அட்ட வீரட்டத்தில் ஒன்று. தக்கன்செய்த யாகத்திற்குப் போந்த மாயன் முதலிய விண்ணவர்களின் வேதனையைத் தீர்த்த தலம்.

இறைவன் பெயர் வீரட்டேசுரர். இறைவியின் பெயர் இளம் கொம்பனையாள். தீர்த்தம் சிவகங்கை.

தருமையாதீன அருளாட்சியில் உள்ளது.

கல்வெட்டு:

இத்தலம் சுந்தரபாண்டியன் 5ஆம் ஆட்சி ஆண்டில் ஜெயங்கொண்ட சோழவளநாட்டு வீழைநாட்டு ராஜநாராயண சதுர்வேதி மங்கலமான பறியலூர் என வழங்கப்படுகிறது. இறைவன் தட்சேசுவரமுடையார் எனவும், திருவீரட்டான முடையார் எனவும் வழங்கப்படுகிறார். கிருஷ்ணப்பதேவமகாராயரால் குறிப்பிட்டசில கிராமங்கள் (பறியலூர் உட்பட) சூலவரி வசூலிக்கப்பெற்றுச் சிவ விஷ்ணு கோயிலுக்களிக்கப்பட்டது. இதில் யாத்ரீகர்களுக்கும் உணவளிக்க ஏற்பாடுசெய்யப்பெற்றது. பூங்காக் குடியான பரராஜ பயங்கரநல்லூரில் 30 வேலி நிலத்தை இறையிலி செய்தளிக்கப்பட்டது. இங்கே ஏழுலகமுழுதுடைய சதுர்வேதி மங்கலத்து ஒரு அக்ரகாரம் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டது 1.

83. திருத்தருமபுரம்

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத் தலம். காரைக்கால் - திருநள்ளாறு பேருந்து வழியில் உள்ளது. பாண்டவர்களில் தருமன் பூசித்துப் பேறுபெற்றமையின் இப்பெயர் எய்தியது. பிரமதேவரும் பூசித்துப் பேறுபெற்றுள்ளார். திருநீலகண்ட யாழ்ப்பாணரது தாயார் பிறந்த இடமாதலின் திருஞானசம்பந்தர் இங்கு எழுந்தருளியபோது, பாணரது சுற்றத்தவர்கள் இவர் யாழ்கொண்டு வாசிக்காவிடில் திருஞானசம்பந்தர் பாடல் சிறக்காதென்றனர். கேட்ட பாணர் வருந்தித்

_________

1 167 to 169 of 1925.