பக்கம் எண் :

206தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


இறைவன் பெயர் கும்பேசர், அமுதகும்பேசர், ஆதிகும்பேசர், அம்மையின் பெயர் மங்களாம்பிகை. பிரமன், அகத்தியர், கிருதவீரியன், வீரவர்மன், இந்திரன், மாந்தாதா முதலியோர் வழிபட்டுப் பேறுபெற்றனர்.

கல்வெட்டு:

இத்தலம் உய்யக்கொண்டான் வளநாட்டு வடகரையம்பூர் நாட்டுத் திருக்குடந்தை என வழங்கும்1. கல்வெட்டுக்கள் பெரும்பாலும் நாகேச்சரமாகிய கீழ்க்கோட்டத்தைப்பற்றியனவே. குடமூக்கு என்னும் இத்தலத்தைப்பற்றியன அல்லவாதலின் அவை ஈண்டுத் தரப்படவில்லை.

85. திருக்கச்சிஏகம்பம்

தொண்டைநாட்டுத் தலங்களில் முதலாவதாக விளங்கும் பெருநகர். சென்னை செங்கற்பட்டு முதலிய பல நகரங்களிலிருந்தும் பேருந்துகளில் வரலாம்.

கயிலாயத்தினின்றும் இங்கு எழுந்தருளிய இறைவி, இறைவனை எய்துதற்பொருட்டுத் தவஞ்செய்தனர். எண்ணான்கு அறங்களையும் வழுவாதியற்றினர். கம்பையாற்றில் ஒற்றை மாமரத் தடியில் மணலால் சிவலிங்கம்செய்து வழிபட்டனர். இறைவன் அருளால் நீர்கடுகிவரக் கம்பித்து, இறைவனைத் தழுவினர். வளைத்தழும்பும் முலைத் தழும்பும் இறைவன் தன் மேனியில் ஏற்றனர் என்பது புராண வரலாறு.

கம்பம் - நடுக்கம். ஏகாம்பரம் - ஒற்றை மாமரம். பஞ்சபூத தலங்களுள் பிருதிவித்தலம். ‘முத்திதரும் நகரேழனுள் முக்கியமாம் முதற்காஞ்சி’ என்றதற்கேற்ப முத்திதரும் நகருள் முதன்மைபெற்றது. இத்தலத்து அமைந்துள்ள சிவ, விஷ்ணு, தேவி, கணபதி, முருகன் ஆலயங்கள் அளவிடற்கரிய புகழுடையன. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஆட்சிசெய்த தலம். சுந்தரர் இடக்கண்பெற்ற தலம். திருக்குறிப்புத் தொண்ட நாயனார் சாக்கியநாயனார் ஆகிய இவர்கள் முத்தி பெற்ற தலம்.

___________

1 S.I 256 of 1911, 14 of 1980.