பக்கம் எண் :

 திருஞானசம்பந்தர் வரலாறு217


அவ்வப்போது வர வெருக்கொண்டு அழும் நிலை அவர்பால் இருந்தது. இந்நிலையில் பிள்ளையாருக்கு வயது இரண்டாண்டுகள் நிரம்பின. மூன்றாவது வயதின் தளர் நடைப்பருவத்தில் பிள்ளையார் ஏனைய குழந்தைகளோடு வீதியில் விளையாடும் நிலையை எய்தினார்.

ஞானப்பால் உண்டது:

ஒரு நாள் காலையில் சிவபாத இருதயர் வேதவிதிப்படி நீராடுதற்குத் திருக்கோயிலுள்ளிருக்கும் பிரமதீர்த்தத்திற்குப் புறப்பட்டார். தந்தையார் வெளியில் செல்வதைக் கண்ட பிள்ளையார் தானும் உடன் வர வேண்டுமென்ற குறிப்போடு கால்களைக் கொட்டிக் கொண்டு அழுதார். தந்தையார் தன் மைந்தரைப் பார்த்து ‘உன் செய்கை இதுவாயின் உடன் வருக’ எனக் கூறி அவரையும் உடனழைத்துக் கொண்டு சென்று பிரமதீர்த்தக் கரையில் பிள்ளையாரை இருத்திவிட்டு விரைந்து நீராடித் திரும்பும் எண்ணத்தோடு நீர்நிலையில் இறங்கினார். சில நிமிடங்கள் முழ்கியிருந்து செபித்தற்குரிய அகமர்ஷண மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு நீரில் மூழ்கினார்.

இந்நிலையில் கரையில் அமர்ந்திருந்த பிள்ளையார் தந்தையாரைக் காணாமல் முற்பிறப்பின் நினைவு மேலிட்டவராய் திருத்தோணி மலைச் சிகரத்தைப் பார்த்துக் கண்மலர்கள் நீர் ததும்பக் கைமலர்களால் பிசைந்து வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடை துடிப்ப ‘அம்மே அப்பா’ என அழைத்து அழுதருளினார். பிள்ளையின் அழுகுரல் கேட்ட நிலையில் தோணிபுரத்து இறைவர் இறைவியாருடன் விடைமீது அமர்ந்து குளக்கரைக்கு எழுந்தருளினார்.பெருமான் உமையம்மையை நோக்கி ‘அழுகின்ற இப்பிள்ளைக்கு உன் முலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து ஊட்டுக’ எனப்பணித்தார். அம்மையாரும் அவ்வாறே தன் திருமுலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து சிவஞானமாகிய அமுதைக் குழைத்து அழுகின்ற குழந்தை கையில் கொடுத்து உண்ணச் செய்து அழுகை தீர்த்தருளினார். தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைக்காத பேரின்பம் பெற்ற நிலையில் பிள்ளையார் திருஞானசம்பந்தராய் அபரஞானம் பரஞானம் அனைத்தும் கைவரப் பெற்றார்.

எண்ணரிய சிவஞானத் தின்னமுதம் குழைத்தருளி
உண்ணடிசில் எனஊட்ட உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்தருளிக் கையில்பொற் கிண்ணம்அளித்(து)
அண்ணலைஅங்கு அழுகைதீர்த்து அங்கணனார் அருள்புரிந்தார்.