பக்கம் எண் :

218திருஞானசம்பந்தர் வரலாறு(முதல் திருமுறை)


சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங் கியஞானம்
உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்

எனச் சேக்கிழார் இதனைப் போற்றி உரைத்தலைக் காணலாம்.

அப்பொழுது நீரில் மூழ்கி நியமங்களை முடித்துக் கரை யேறிய சிவபாத இருதயர் சிவஞானத் திருவுருவாய்க் கரையில்நிற்கும் தம்மைந்தரைக் கண்டார். கடைவாய் வழியாகப் பால் வழிந்திருப்பதைக் கண்ட அவர், தன் மகனார்க்கு யாரோ பால் அளித்துச் சென்றுள்ளார்கள் என்று எண்ணியவராய் ஞான போனகரை நோக்கிப் ‘பிள்ளாய் நீ யார் அளித்த பால் அடிசிலை உண்டாய்? எச்சில் கலக்குமாறு உனக்கு இதனை அளித்தவர் யார்? காட்டுக’ என்று வெகுண்டு தரையில் கிடந்த கோல் ஒன்றைக் கையில் எடுத்து ஒச்சியவராய் வினவினார்.

சிறிய பெருந்தகையார் தம் உள்ளத்துள் எழுந்த உயர் ஞானத் திருமொழியால் தமிழ் என்னும் மொழியின் முதல் எழுத்தாகிய தகர மெய்யில் பிரணவத்தை உயிராய் இணைத்துத் தனக்குப் பாலளித்த உமை அம்மையின் தோடணிந்த திருச்செவியைச் சிறப்பிக்கும் முறையில் ‘தோடுடைய செவியன்’ என்ற முதற்பெரும் பாடலால் தனக்குப் பாலளித்த கடவுளின் அடையாளங்களைச் சுட்டித் திருப்பதிகம் அருளிச்செய்தார். அதனைக் கேட்ட சிவபாத இருதயர் அடித்தற்கு என ஓங்கிய கோல் நெகிழ்ந்து வீழ வியப்பும் வெருட்சியும் மேலிட்டவராய் நின்றார். ஞானசம்பந்தர் தந்தையார் உடன் வர ஆலயம் சென்று பிரமபுரத்துப் பெருமானை வணங்கிப் போற்றி மீண்டார்.

இச் செய்தி நகர் முழுவதும் பரவிய நிலையில் அன்பர்கள் ஞானசம்பந்தரைப் போற்றி வரவேற்க, சிவபாத இருதயர் பிள்ளையாரைத் தம் தோள்மேல் அமர்த்திக் கொண்டு தம் இல்லம் சென்றடைந்தார்.

பொற்றாளம் பெற்றது:

உமையம்மையார் அளித்த ஞானவாரமுதம் உண்டு திரு நெறிய தமிழ் பாடிய திருஞானசம்பந்தர் தம் திருமாளிகையில் இறையருளையே எண்ணியிருந்து மறுநாட் காலையில் துயிலுணர்ந்