பக்கம் எண் :

 திருஞானசம்பந்தர் வரலாறு219


தெழுந்து நீராடி திருக்கழுமலத்தீசனை வணங்கிப் போற்றி, சீகாழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்காவைத் தரிசிக்கும் வேட்கை உடையவராய் அத்தலத்தை அடைந்து ஆலயத்தை வலம் வந்து இறைவன் திருமுன் நின்று ‘மடையில் வாளை’ எனத் தொடங்கும் இசைத்தமிழ்ப் பதிகத்தைத் தம் கைமலர்களால் தாளம் இட்டுப் பாடினார். கோலக்கா இறைவன் பிள்ளையார் கைகள் சிவப்பதைக்கண்டு மனம் பொறாது திருவைந்தெழுத்து எழுதப் பெற்ற பொற்றாளத்தைத் திருஞானசம்பந்தருக்கு அளித்தருளினார். ஞானசம்பந்தர் அத்தாளத்தைத் தலை மேல் கொண்டு போற்றி, தாளமிட்டு அத்திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார்.

திருஞானசம்பந்தர் மேற்கொண்ட முதல் தலயாத்திரையாக இது அமைந்தது.

திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றுச் சீகாழி திரும்பிய ஞானசம்பந்தர் நேரே ஆலயம் சென்று ‘பூவார் கொன்றை’ எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் தாளமிட்டுப் பாடிப் போற்றித் தம் மாளிகையை அடைந்தார்.

திருநனிபள்ளி யாத்திரை:

ஞானசம்பந்தரின் தாயார் பகவதி அம்மையார் பிறந்த நனிபள்ளியிலுள்ள அந்தணர்கள், அவர் மூவாண்டில் சிவஞானம்பெற்றதையும் சிவபிரானால் பொற்றாளம் அருளப் பெற்றதையும் கேள்வியுற்றுத் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டுமென ஞானசம்பந்தரை வேண்டினர். அதற்கு இசைந்த ஞானசம்பந்தர் தோணிபுரத்து இறைவரை வணங்கி விடைபெற்றுத் தாமரை மலர் போன்ற தம் திருவடி நோக நனிபள்ளி நோக்கி நடந்தருளினார். ஆளுடைய பிள்ளையார் அடிமலர் வருந்தக் கண்ட சிவபாத இருதயர் ஞானசம்பந்தரைப் பிறர் தூக்கிச் செல்வதை விரும்பாது தாமே தன் திருத்தோளில் அமர்த்திக் கொண்டு செல்வாராயினார். நனிபள்ளியை அணுகிய நிலையில் ஞானசம்பந்தர் எதிரே தோன்றும் இப்பதியாது எனக் கேட்கத் தந்தையார் ‘அது தான் நனிபள்ளி’ எனச் சொல்லக் கேட்டுக் ‘காரைகள் கூகைமுல்லை’ எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிக் கொண்டே நனிபள்ளி ஆலயத்தை அடைந்து வணங்கிப் போற்றி அவ்வூரின் அருகிலுள்ள தலைச்சங்காடு, சாய்க்காடு, வெண்காடு, முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு மீண்டும் சீகாழிப் பதிக்குத் திரும்பினார். வளம் குன்றிப் பாலையாயிருந்த நனிபள்ளி, ஞானசம்பந்தர் வரவால் நெய்தலாய்ப் பின் மருதமாயிற்று.