பக்கம் எண் :

254திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


செபித்துக் கொண்டிருந்தார். அங்ஙனம் அவர் மூழ்கியதும் உடல் தந்தையைக் காணாது சிறிதும் தனித்திரார் என்ற வியாசத்தால் முழுமுதல் தந்தையாகிய சிவபெருமானது திருவடிகளை முறைப்படி வழிபட்ட பண்டையுணர்வு மூண்டெழ, பிள்ளையார் திருத்தோணிச்சிகரம் பார்த்து, ‘அம்மே! அப்பா!‘ என அழுதார். இவ்வொலி திருத்தோணி மலையில் வீற்றிருக்கும் அம்மையப்பர் திருச்செவியில் சென்று சேர்ந்தது. முன்னிலைமைத் திருத்தொண்டு முன்னி, அவர்க்கருள் புரிவதற்காகப் பெருமான் பொருவிடைமேல் அம்மையுடன் எழுந்தருளினார். எவ்வுலகும் தொழநின்ற மலைக் கொடியைப் பார்த்து, ‘துணை முலைகள் பொழிகின்ற பாலடிசில் பொன்வள்ளத்து ஊட்டுக‘ என ஆணை தந்தார். அப்படியே அம்மையாரும் கறந்தருளி, எண்ணரிய சிவஞானத்தின்னமுதம் குழைத்து ‘உண்அடிசில்‘ என ஊட்டினார்; கண்ணீரைத் துடைத்தார்; அழுகையை அகற்றினார். உயிர்த் தந்தையும் தாயுமாகிய இவர்களே திருமேனி தாங்கி வெளிப்பட்டுவந்து இங்ஙனம் அருளப் பெற்றமையால் இவர் ஆளுடைய பிள்ளையார் எனவும் தேவர் முதலானோர்க்கும் அறிய முடியாத சிவஞானம் சம்பந்திக்கப் பெற்றமையால் திருஞானசம்பந்தர் எனவும் அழைக்கப் பெறுவாராயினார்.

செப முடித்து நீராடிக் கரையேறிய சிவபாத இருதயர் கடை வாய் வழிந்து கிடக்கின்ற பாலைக் கண்டு "நீ யார் தந்த பாலை உண்டாய்? எச்சில் மயங்கிட உனக்கு இது இட்டாரைக் காட்டு" என்று சிறுகோல் கொண்டு ஓச்சி உரப்பினார். குழந்தையாகிய பிள்ளையார் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிக்க வலக்கையைச் சிரத்தின் மேலுயர்த்தி, வானிடமெல்லாம் பரவி நிற்கும் ஒளியோடு விடையின்மீது பண்ணிறைந்த அரு மறைகள் பணிந்தேத்த, பரமகருணையின் வடிவாகிய பராசக்தியோடு நின்ற அருள் வண்ணப் பெருமானைச் சுட்டிக் காட்டினார். உளம் நிறைந்து வழிந்த உயர் ஞானத்திருமொழியால் இத்திருப்பதிகத்தைப் பாடியருளினார்.

---------------------------------------

இந்த ஆறு வாக்கியங்களையோ, பன்னிரண்டு முறை, எட்டு முறை, அல்லது மூன்று முறை சக்திக்குத் தக்கவாறு உச்சரித்து இறைவனை நினைந்து, அவன் திருவடிகளிலிருந்து வரும் கங்கைநீர் தலையில் விழுவதாகப் பாவித்து நீராடல் அகமர்ஷணம் ஆகும்.