பக்கம் எண் :

 1. திருப்பிரமபுரம்267


கு-ரை: அருநெறியமறை வல்லமுனி - அருமையான நெறிகளை வகுக்கும் மறைகளில் வல்ல முனிவனாகிய பிரமன். அலர்மேய அகன்பொய்கை பிரமாபுரம் மேவிய பெருநெறிய பெம்மான் இவன்றன்னை - தாமரைகள் பொருந்திய அகன்ற பொய்கையை உடைய பிரமாபுரத்தில் விரும்பியிருந்த முத்திநெறிசேர்க்கும் முதல்வனை. ஒருநெறியமனம் - ஒன்றுபட்ட மனம். மனம் ஐந்து வழியாகவும் அறிந்தவற்றை வழியடைத்தகாலத்தும் சென்று பற்றித் தன்மயமாயிருப்பதொன்றாகலின் அங்ஙனம் செல்லாது ஒருங்கிய மனத்தை ஈண்டு விதந்தார்கள். வைத்து - பிரியாதே பதித்து. திருநெறியதமிழ் - சிவ நெறியாகிய அருநெறியையுடைய தமிழ். தொல்வினை - பழமையாகிய வினை; என்றது ஆகாமிய சஞ்சிதங்களையும், இனி வரக்கடவ பிராரத்த சேடத்தையும். முன்னைய தீரினும் பிராரத்த சேடம் நுகராதொழியாதாகவும் இங்ஙனங்கூறியது, யான் நுகர்கிறேன் என்ற இன்னலுமின்றிக் கழிக்கப்படுதலை. இதனால் பழவினை நீக்கமே இப்பதிகப் பயன் என்று உணர்த்தியவாறு.

குருவருள்: வேதம் உலகினருக்கு வேண்டிய பொது அறங்கள் பலவற்றைச் சொல்வது ஆதலின், அதை இங்கு அருநெறிய மறை என்றும், ஆகமம் சத்திநிபாதர்க்குரிய சைவ நுட்பங்களைச் சொல்வது ஆதலின், அதனை இங்கு அவற்றின் மேம்பட்டது எனும் பொருளில் பெருநெறி என்றும் கூறினார். ஒருநெறி அல்லது ஒருசமயம் என்றால் அது உலகினர் அனைவருக்கும் பயன்தரத் தக்கதாய் இருத்தல் வேண்டும். அதுபற்றியே ஞானசம்பந்தர் உலகினருக்கு அருநெறிப் பயனும் சத்திநிபாதர்க்கு பெருநெறிப்பயனும் உணர்த்தினார். ஆயினும் அருநெறியும் பெருநெறியும் ஒருநெறியே என்பதையும் அதுவே திருநெறி என்பதையும் உணர்த்தியருளினார். இக்கருத்தைத் திருமந்திரமும்

திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாம்சிவ மாநெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.

- திருமந்திரம் - வேதச் சிறப்பு.

என உணர்த்துவது காண்க. பீடுடைத்தேசிகன் செயல் திருநோக்கால் ஊழ்வினையைப் போக்குதல் எனவே தேசிகன் பேரருள் தொல்வினை தீர்த்தல் ஆயிற்று. "தோடு கூற்று பித்தா மூன்றும் பீடுடைத் தேசிகன் பேரருளாகும்" என்பது அபியுக்தர் வாக்கு.