30. கடலினஞ்சமமு துண்டிமையோர்தொழு
தேத்தநடமாடி
அடலிலங்கையரை யன்வலிசெற்றருள்
அம்மான்அமர்கோயில்
மடலிலங்குகமு கின்பலவின்மது
விம்மும்வலிதாயம்
உடலிலங்குமுயி
ருள்ளளவுந்தொழ
வுள்ளத்துயர்போமே.
8
__________________________________________________
வருகாமன் - தேவ காரியத்தை
முடிப்பதற்காக இந்திரன் கோபத்திற்காளாகி இறப்பதைக்காட்டிலும்
சிவபெருமான் மறக்கருணையால் உய்வேன் என்று
விரும்பிவந்த காமன். வீட்டி - அழித்து. உயிர் வீட்டி
என்றது நித்தியமாகிய உயிரை அழித்ததன்று, அதனைத்
தன்னகத் தொடுக்கி, உண்மைக்கதி - என்றும் நிலைத்த
முத்தி.
8. பொ-ரை: உடலில் உயிர்
உள்ள அளவும் தொழுவாரது மனத்துயரம் கெடும் என வினை
முடிபு காண்க. திருப்பாற்கடலைக் கடைந்த போது எழுந்த
நஞ்சினை அமுதமாக உண்டு தேவர்கள் தொழுது வாழ்த்த
நடனம் ஆடி, வலிமை மிக்க இலங்கை மன்னனின் ஆற்றலை
அழித்துப் பின் அவனுக்கு நல்லருள் புரிந்த இறைவன்
எழுந்தருளிய கோயிலை உடையதும், மடல்கள்
விளங்கும் கமுகு பலாமரம் ஆகியவற்றின் தேன் மிகுந்து
காணப்படுவதுமாகிய திருவலிதாயத் தலத்தை நினைக்க
மனத்துயர் கெடும்.
கு-ரை: இது வினைக்கீடாகிய
உடலில் உயிருள்ள அளவும் தொழுவாரது மனத்துன்பம்
மடியும் என்கின்றது. கடல் - பாற்கடல் நஞ்சம் அமுதுண்டு
என்றது நஞ்சின் கொடுமைகண்டும் அதனை அமுதாக ஏற்றமையை.
இலங்கை யரையன் வலிசெற்று என்றது அவன் வலிமை காரணமாகவே
செருக்கியிருந்தானாகலின் அவனை அது கெடுத்து ஆட்கொண்டார்
என்றது.
குருவருள்: சிவபூசை எடுத்துக்
கொள்பவர் "என் உடலில் உயிர் உள்ள அளவும்
பூசையை விடாது செய்து வருவேன்" என்ற உறுதி மொழி
கொடுத்தே எடுத்துக்கொள்வர். அக்கருத்தை இப்பாடலின்
இறுதிவரி குறிப்பிடுதலைக் காணலாம். "பழனஞ்சேர்
அப்பனை என்கண் பொருந்தும் போழ்தத்தும் கைவிட
நான் கடவேனோ" என்ற அப்பர் தேவாரமும் காண்க.
|