பக்கம் எண் :

 ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின் ஆசியுரை29


தில்லைச்சிற் றம்பலமே சென்று."

தில்லைச்சிற்றம்பலத்தின் மேல்பால் மூவர் கைஅடையாளம் உள்ள அறையில் இருந்த திருமுறைகள் செல்அரித்திருந்தமையை உணர்ந்தமையால் செல் அரியாவண்ணம் இப்படைத்தலைவன் காளிங்கராயன் செப்பேடு செய்வித்தான்.

திருவாரூரிலும் திருமுறைகள் செப்பேடு செய்திருந்தமையை, அச்செப்பேட்டிலிருந்து படி எடுத்த தருமை ஆதீன ஓலைச் சுவடியால் புலனாகிறது. இப்படி யெல்லாம் திருமுறைகளின் அருமை, பெருமை தெரிந்து போற்றிய முன்னோர்களின் திருவுளக் கருத்தை உணர்வோமாக.

ஓலைச்சுவடிகளில் திருமுறை:

மற்றொரு வகையில் திருமுறைகண்ட சோழன் பற்றிச் சிந்திப்போம். ஞானசம்பந்தர் காலத்தில் அவருடனே இருந்து அவர் பாடல்களையெல்லாம் எழுதி வந்த சம்பந்த சரணாலயரே திருமுறைகளை முதன்முதலில் ஓலைச்சுவடிகளில் எழுதியவர்.

அதன்பிறகு ஏறத்தாழ ஞானசம்பந்தர் காலத்தில் இருந்தவராகக் கருதப்பெறும் சீகாழி கணநாதநாயனார், திருமுறைகளை எழுதுவோர் வாசிப்போரைத் தயாரித்தார் என்பது அவரைப் பற்றிய செய்தி.

பிற்காலத்தில் திருநெல்வேலிப் பகுதியிலும், வேதாரண்யம் பகுதியிலும் சில தேசிகர் குடும்பத்தினர் ஓலையில் திருமுறைகளை எழுதி, பலருக்கும் வழங்கி அதனால் வரும் ஊதியம் கொண்டு வாழ்க்கை நடத்தினர் என்று மர்ரே கம்பெனி திரு.ராஜம் குறிப்பிட்டு உள்ளதும் சிந்திக்கவேண்டிய செய்தி. இதில் காலக் குறிப்பில்லை.

இதுபற்றிப் பொதுவாகச் சிந்தித்தால் தேவாரத் திருமுறைகள் தேவார மூவர் காலத்திற்குபின் மக்கள் வழக்கில் அருகி இருந்தன என்பதும், திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் அருளால் நம்பியாண்டார் நம்பிகள் இராஜராஜன் வேண்டுகோட்படி சிதம்பரத்தில் சிற்றம்பலத்தின்மேல்பால் உள்ள மூவர் கைஅடையாளம் உள்ள அறையில் திருமுறைகள் உள்ளன என்பது கண்டு அறிவித்ததுமுதல், இன்றுள்ள மூவர் தேவாரம் நமக்குக் கிடைத்துள்ளது என்று கொள்ள இடம் தருகிறது.