பக்கம் எண் :

304திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


53. ஒண்டுவ ரார்துகி லாடைமெய்போர்த்

துச்சிகொ ளாமையுண் டேயுரைக்குங்

குண்டர்க ளோடரைக் கூறையில்லார்

கூறுவதாங்குண மல்லகண்டீர்

அண்டம றையவன் மாலுங்காணா

ஆதியி னானுறை காட்டுப்பள்ளி

வண்டம ரும்மலர்க் கொன்றைமாலை

வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே. 10

__________________________________________________

- மெய்ஞ்ஞானம். பெற்றம் அமரும் - இடபத்தை ஊர்கின்ற; பெற்ற மரும் என அம் ஈறு கெட்டது. அவனை யன்றிப் பேசும் பேச்சு மற்றொன்றிலாமையால் மற்றொர் பேச்சிலோம் என்றார்.

10. பொ-ரை: நிறம் பொருந்திய காவியாடையை மேனியில் போர்த்து, உச்சிவேளையில் வயிறு கொள்ளாத அளவில் தின்று பொய் கூறும் உடல் பருத்த புத்தர், இடையில் உடையில்லாத திகம்பர சமணர் கூறுவன நற்பயனைத் தாராதன என்பதை அறிந்து கொள்ளுங்கள். உலகைப் படைத்த வேதாசாரியனான பிரமனும், மாலுங் காணாத முதல்வன் உறையும் திருக்காட்டுப்பள்ளிக்குச் சென்று வண்டு அமரும் மலர்க்கொன்றை புனைந்த வார் சடையோன் கழல்களை ஏத்தி வாழ்த்துவோம்.

கு-ரை: இது புத்தரும், சமணரும் கூறுவன குணமற்ற சொற்கள்; அவைகளை உறுதியென நம்பாதீர்; இறைவன் கழலை ஏத்துவோம் என்கின்றது. துவர் ஆர் துகில் - காவியாடை, கொள்ளாமை உண்டு - கொள்ளாத அளவு மிகுதியாக உண்டு, குண்டர்கள் - உடல் பருத்த புத்தர்கள். அரைக்கூறையில்லார் - அரையில் ஆடையில்லாதவர்கள்; திகம்பர சைனர்கள் கூறுவன குணமல்ல. தாம் அசை. கண்டீர் - கண்டு தெளியுங்கோள். அண்ட மறையவன் - இரண்ய கருப்பனாகிய பிரமன். பிரமன் நீரையே முதற்படைத்தான் என்பதும், அதில் பொன்மயமான முட்டையாக உலகையாக்கினான் என்பதும் புராண வரலாறு. அமரும் - விரும்பும்.