பக்கம் எண் :

314திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


64. நாலுங் குலைக்கமு கோங்குகாழி

ஞானசம் பந்தன் நலந்திகழும்

மாலின் மதிதவழ் மாடமோங்கும்

மருகலின் மற்றதன் மேன்மொழிந்த

சேலும் கயலும் திளைத்தகண்ணார்

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

சூலம்வல் லான்கழ லேத்துபாடல்

சொல்லவல் லார்வினை யில்லையாமே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

கலைமல்கு தோல் - மான்தோலாடை, எல்லி - இரவு. கையில் மருதிலைச் சாயம்பூசி, வெற்றிலைபாக்கும் சுக்கும் தின்னுதல் சமணத்துறவியர் இயல்பு போலும். நீதரல்லார் தேரரை நீங்கிநின்று தொழும் மாமருகல் எனக்கூட்டுக.

11. பொ-ரை: தொங்குகின்ற குலைகளோடு பாக்கு மரங்கள் ஓங்கி வளரும் சீகாழிப் பதியினனாய ஞானசம்பந்தன், நலம் திகழ்வதும், மேகமும் பிறையும் தவழும் மாடங்கள் ஓங்கியதுமான திருமருகல் இறைவனையும், சேல் கயல் ஆகிய மீன் வகைகளை ஒத்த கண்களை உடைய மகளிர் வாழ்வதும் சிறப்பு மிக்கதும் ஆகிய செங்காட்டங் குடியில் முத்தலைச் சூலம் ஏந்தியவனாய் விளங்கும் பெருமானையும் புகழ்ந்து ஏத்திய பாடல்களைச் சொல்லித் துதிக்க வல்லார் வினைகள், இல்லையாகும்.

கு-ரை: நாலும் - தொங்குகின்ற. மாலின் மதி தவழ் மாடம் - மேகத்தோடு பிறையுந்தவழ்கின்ற மாடங்கள். திளைத்த - ஒத்த. சூலம் ஞானப்படையாய் மலமாயாகன்மங்களைப் போக்குவதாகலின், சூலம் வல்லான் கழல் ஏத்து பாடல் வல்லார் வினை இல்லையெனக் காரணம் குறிப்பித்தருளினார்கள்.