பக்கம் எண் :

 7. திருநள்ளாறும் திருவாலவாயும்317


66. திங்களம் போதுஞ் செழும்புனலும்

செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து

நங்கண் மகிழும்நள் ளாறுடைய

நம்பெருமானிது வென்கொல்சொல்லாய்

பொங்கிள மென்முலை யார்களோடும்

புனமயி லாட நிலாமுளைக்கும்

அங்கழ கச்சுதை மாடக்கூடல்

ஆலவா யின்க ணமர்ந்தவாறே. 2

67. தண்ணறு மத்தமும் கூவிளமும்

வெண்டலை மாலையும் தாங்கியார்க்கும்

நண்ணல ரியநள் ளாறுடைய

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

__________________________________________________

2. பொ-ரை: பிறைமதி, அழகிய மலர்கள், வளமான கங்கை நதி ஆகியவற்றைத் தன் செஞ்சடையின் மேல் அருகருகே வைத்து மகிழ்ந்து நம் கண்கள் களிக்குமாறு நள்ளாற்றின்கண் எழுந்தருளிய நம் பெருமானே! நீ, பூரித்து எழும் மென்மையான இளைய தனங்களை உடைய மடந்தையரோடு கானகத்தில் வாழும் ஆண் மயில்கள் களித்தாட, பெருமை மிக்க தமிழ்ச் சங்கத்தினையும், நிலவொளி வெளிப்படுமாறு வெண்மையான சுண்ணாம்பினால் கட்டப்பட்ட மாடங்களையும் உடைய கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.

கு-ரை: போது வாடாமைப் புனல் வைப்பார்போலத் திங்களம் போது வாடாத வண்ணம் செழும் புனலைச் சேரவைத்தார் என்பது சிந்தித்தற் குரியது. நங்கண் - நம்மிடத்து. மகளிரோடு மயிலாட என்றது சாயலால் வேற்றுமை தோன்றாமையால். கார் வரவால் களிப்பது மயில். கணவர் வரவால் களிப்பவர் மகளிர். ஆட்டம் ஈரிடத்தும் நிகழ்வது இயல்பு. அம் கழகம் - பெருமை மிக்க தமிழ்ச் சங்கம். நிலா - வெள்ளொளி.

3. பொ-ரை: குளிர்ந்த மணம் வீசும் ஊமத்தை மலர் வில்வம் ஆகியவற்றையும் வெண்மையான தலை மாலையையும் அணிந்து, திருவருள் இருந்தாலன்றி யாராலும் சென்று வழிபடற்கரிய நள்ளாற்றின்கண் எழுந்தருளிய நம் பெருமானே! நீ, புண்ணிய வாணரும் மாதவர்களும் வந்து ஏத்துவதும் அணிகலன்கள் புனைந்த மகளிர்