பக்கம் எண் :

 7. திருநள்ளாறும் திருவாலவாயும்319


69. செம்பொன்செய் மாலையும் வாசிகையும்

திருந்து புகையும் அவியும்பாட்டும்

நம்பும் பெருமைநள் ளாறுடைய

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

உம்பரும் நாகரு லகந்தானும்

ஒலிகடல் சூழ்ந்த வுலகத்தோரும்

அம்புத நால்களால் நீடுங்கூடல்

ஆலவா யின்க ணமர்ந்தவாறே. 5

__________________________________________________

கு-ரை: பூவினில் வாசம் முதலியன இறைவன் கலந்து நிற்கும் நிலை கூறியன. "பூவினுள் நாற்றம் நீ தீயினுள் தெறலும் நீ" என்னும் பரிபாட்டானும் அறிக.

புனலில் பொற்பு - நீரில் அழகு. புது விரைச் சாந்து - புதிதாக அரைத்து எண்வகை மணப் பொருள்களும் கூட்டப் பெற்ற சந்தனம். நள்ளாறன் ஐம்பொறிகளுக்கும் இன்பப் பொருளாயிருக்கும் தன்மையைச் சில சொல்லித் தெரிவிக்கின்றார். பூவினில் வாசம் என்பது முதல் நாவினில் பாடல் என்பதுவரை. பொற்பு - அழகு. என்றது தட்பமும் தெளிவும். தானவர் - அசுரர். ஆவினில் ஐந்து - பால், தயிர், நெய், கோசலம், கோமயம், என்பன.

5. பொ-ரை: செம்பொன்னால் செய்த மாலைகள், திருவாசி ஆகியவற்றுடன் மணப்புகை நிவேதனம் தோத்திரம் ஆகியவற்றை விரும்பி ஏற்கும் பெருமை உடைய, நள்ளாற்றில் விளங்கும் நம்பெருமானே! நீ, விண்ணவரும், நாகர் உலகத்தவரும், ஒலிக்கும் கடலால் சூழப்பட்ட மண்ணுலக மக்களும் ஏத்த, நான்கு மேகங்களால் சூழப்பட்ட கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.

கு-ரை: வாசிகை - திருவாசி (ஒருவகை மாலை). அவி - நைவேத்தியம். பாட்டு - தோத்திரம். விரும்பும் பெருமை - அனைவரும் இவரே எமக்கு அடைக்கலமாவார் என்று நம்பும் பெருமை. உம்பர் - தேவர்.

அம்புதம் - மேகம். அம்புதம் நால்களான் நீடுங்கூடல் - நான்கு மேகங்கள் கூடிய கூடல் நகர், நால்கள் - நான்கு. நால் - நான்கு, அதன்மேற்பன்மை விகுதி நால்கள்; இது அரும்பிரயோகம்.