பக்கம் எண் :

 8. திரு ஆவூர்ப்பசுபதீச்சரம்325


8. திரு ஆவூர்ப்பசுபதீச்சரம்

பதிக வரலாறு:

திருப்பூவனூர்சென்று வணங்கிய திருஞானசம்பந்தர், சிவனடியார்கள் பலர் ஏத்தொலியெடுப்ப, மிகப்பழம்பதியாகிய ஆவூரையடைந்தார்கள். பசுபதீச்சரத்தை வணங்கி இப்பதிகத்தை அருளிச்செய்தார்கள்.

பண்: நட்டபாடை

பதிக எண்: 8

திருச்சிற்றம்பலம்

76. புண்ணியர் பூதியர் பூதநாதர்

புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்

கண்ணிய ரென்றென்று காதலாளர்

கைதொழு தேத்த விருந்தவூராம்

விண்ணுயர் மாளிகை மாடவீதி

விரைகமழ் சோலை சுலாவியெங்கும்

பண்ணியல் பாடல றாதவாவூர்ப்

பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1

__________________________________________________

1. பொ-ரை: அன்புடை அடியவர் புண்ணியம் திரண்டனைய வடிவினர் எனவும், நிறைந்த செல்வம் உடையவர் எனவும், பூதகணங்களின் தலைவர் எனவும், அருகில் வந்து பரவுவாரின் மனத்தார் எனவும், பிறைமதிக் கண்ணியர் எனவும் கைதொழுது போற்றச் சிவபிரான் எழுந்தருளிய ஊர் ஆகிய வானளாவ உயர்ந்த மாட மாளிகைகளோடு கூடியதும், மணம் கமழும் சோலைகளால் சூழப்பெற்றதும், எங்கும் பண்ணியலோடு கூடிய பாடல்கள் இடைவிடாது கேட்கப்படுவதும் ஆகிய ஆவூர்ப்பசுபதியீச்சரத்தை, நாவே தொழுது பாடுவாயாக.

கு-ரை: பூதியர் - செல்வம் உடையார். புடைபடுவார் - பக்கம் நண்ணிப் பரவுவார். கண்ணி - திருமுடியிற் சூடப் பெறும் மாலை.