பக்கம் எண் :

34ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின் ஆசியுரை(முதல் திருமுறை)


திருக்கடைக்காப்பு எனப் பெறும். பலசுருதி எனச் சொல்லப்பெறும் பதிகப் பயன்கூறும் பாடலாக, இத் திருக்கடைக்காப்பு விளங்குகின்றது. இதுபற்றியே அவர் அருளிய தேவாரத்திற்குத் திருக்கடைக்காப்பு எனப் பெயர் வழங்கலாயிற்று.

ஞானசம்பந்தர் பதினாறாயிரம் பதிகங்கள் அருளிச் செய்தார் என நம்பியாண்டார் நம்பிகள் கூறுகின்றார். நாவுக்கரசர் நாற்பத்தொன்பதாயிரம் பதிகங்கள் அருளினார் எனச் சுந்தரரும், நம்பியாண்டார் நம்பிகளும் கூறுகின்றனர். சுந்தரர் முப்பத்தெட்டாயிரம் பதிகங்கள் பாடினார் எனத் திருமுறைகண்ட புராணம் கூறுகிறது.

இத்துணைப் பதிகங்களில் பலவும் கிடைக்கப் பெறாமையால் இவர்கள் பதிகம் எனக் கூறுவது பாடல்களையே குறிப்பதாகலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். இன்று திருஞானசம்பந்தர் அருளியனவாக 384 பதிகங்களும், திருநாவுக்கரசர் அருளியனவாக 307 பதிகங்களும், சுந்தரர் அருளியனவாக 100 பதிகங்களுமே கிடைத்துள்ளன.

எட்டாம் பாடல்:

இவர் திருப்பதிகங்களில் எட்டாவது பாடல், இராவணன் செய்த பிழையைப் பெருமான் மன்னித்து அவனுக்கு அருள் புரிந்ததைத் தெரிவிக்கின்றது. இதனைச் சேக்கிழார்,

"மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின்
கண்ணுதலான் பெருங்கருணை கைக்கொள்ளும் எனக்காட்ட
எண்ணமிலா வல்லரக்கன் எடுத்துமுறிந் திசைபாட
அண்ணலவற் கருள்புரிந்த ஆக்கப்பா டருள்செய்தார்"

எனக் கூறுவார்.

ஒன்பதாம் பாடல்:

ஒன்பதாவது திருப்பாடல் திருமால் பிரமன் அடிமுடி தேடியறிய இயலாது எய்த்தமையை இயம்புவது. அதற்குச் சேக்கிழார் தரும் விளக்கத்தைப் பின் வரும் பாடலால் அறியலாம்.

"தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத்தொழார்
வழுவான மனத்தாலே மாலாய மாலயனும்
இழிவாகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை