பக்கம் எண் :

 10. திருவண்ணாமலை349


107. வெம்புந்திய கதிரோனொளி

விலகும்விரி சாரல்

அம்புந்திமூ வெயிலெய்தவன்

அண்ணாமலை யதனைக்

கொம்புந்துவ குயிலாலுவ

குளிர்காழியுண் ஞான

சம்பந்தன தமிழ்வல்லவர்

அடிபேணுதல் தவமே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

11. பொ-ரை: வெம்மை மிக்க கதிரவன் ஒளிபுகாதவாறு தடுக்கும் விரிந்த சாரலை உடையதும், அம்பைச் செலுத்தி முப்புரங்களை அழித்த சிவபிரான் எழுந்தருளியதுமான அண்ணாமலையைக் கொம்பு என்னும் வாத்தியங்களின் ஒலியைக் கேட்டு குயில்கள் எதிர் ஒலிக்கும் குளிர்ந்த காழிப் பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத் தமிழை ஓதவல்லவர்களின் திருவடிகளை வணங்குதல் சிறந்த தவமாம்.

கு-ரை: வெம்பு உந்திய - வெப்பமிக்க, மலையே இறைவன் திருமேனியாதலின் அவனைத் தீண்டிப் பழியேற்க விருப்பின்றி கதிரோன் விலகிச் சென்றான் என்பதாம். கொம்பு ஒருவகை வாத்திய விசேடம். கொம்பு ஊதிய இனிய ஓசையைக் குயில் ஒலிக்கும் காழி.

குருவருள்: இப்பாடலின் இறுதிவரி ‘ஞானசம்பந்தன தமிழ் வல்லவர் அடிபேணுதல் தவமே‘ என்கின்றது. இத்திருப்பதிகத்தை வல்லவாறு ஓதுவார்களின் அடியை விரும்பிப் போற்றுதலே ஒருவருக்குத் தவமாக அமையும் என்கிறது. இவ்வாறே திருவலஞ்சுழி பற்றிய ‘விண்டெலாம்‘ என்ற பதிகத்தின் திருக்கடைக்காப்பாகிய ‘வீடும் ஞானமும் வேண்டுதிரேல்‘ என்ற பாடலும், ‘நாடி ஞானசம்பந்தன செந்தமிழ் கொண்டு இசை பாடும் ஞானம் வல்லார் அடி சேர்வது ஞானமே‘ என்ற வரிகளால் இப்பதிகத்தை ஓதுவார்களின் அடிசேர்ந்து வாழ்தலே உண்மை ஞானம் கிடைத்தற்கு ஏதுவாம் என்கின்றது. இவ்விரு பாடல்களும் காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி ஓதுவார் அடிபோற்றின் தவமும் அதன் வழி ஞானமும் உண்டாம் என்பதை வற்புறுத்துவது காணலாம்.