113. கல்லானிழற்
கீழாயிடர்
காவாயென வானோர்
எல்லாமொரு
தேராயயன்
மறைபூட்டிநின்
றுய்ப்ப
வல்லாயெரி
காற்றீர்க்கரி
கோல்வாசுகி
நாண்கல்
வில்லாலெயி
லெய்தானிடம்
வீழிம்மிழ லையே.
6
__________________________________________________
6. பொ-ரை:
சிவபிரான் கல்லால மரநிழற்கீழ் யோகியாய்
வீற்றிருந்த காலத்து அசுரர்களால் இடருழந்த
வானோர் காவாய் என வேண்ட, சூரிய சந்திரராகிய
சக்கரம் பூட்டிய பூமியைத் தேராகக் கொண்டு
நான்முகன் வேதங்களாகிய தேரிற் பூட்டிய
குதிரைகளைச் செலுத்த, அக்கினிதேவனை வலிய
வாயாகவும், வாயுதேவனை இறகாகவும் கொண்ட திருமால்
ஆகிய அம்பை வாசுகி என்னும் பாம்பினை நாணாகப்
பூட்டி மேருமலையாகிய வில்லால் செலுத்தித்
திரிபுரங்களை எய்து அழித்த சிவபிரானது இடம்
திருவீழிமிழலை.
கு-ரை: கல் ஆல்
நிழற்கீழாய் - இறைவன் யோகியாய்க் கல்லால
நிழலின் கீழ் அறம் நால்வர்க்கு உரைத்திருந்த
காலத்து. வானோர் காவாய் என - அசுரர்களால்
வருந்திய தேவர்கள் காவாய் என்று
வேண்டிக்கொள்ள, என்றது வேண்டுதல் வேண்டாமையற்ற
சனகாதியர் யாதொரு துன்பமுமின்றி இருந்த காலத்தே
வினைவயத்தான் வருந்தும் தேவர்கள் அசுரர்
ஒறுத்தற்கு ஆற்றாது வருந்திக்காவாய் என வேண்டினர்
என்பதை விளக்கியவாறு காண்க.
எல் ஆம் ஒரு தேர் -
ஒளிப் பொருளாகிய சூரிய சந்திரர்கள் ஆகிய
சக்கரம் பூண்ட ஒரு தேர். அயன் - பிரமன், இங்கே
பாகனானான். மறை பூட்டி என்றதால் வேதங்கள்
குதிரைகளாயினமை வெளிப்படை.
வல்லாய் எரி -
விரைந்து பற்றும் நெருப்பு. காற்று ஈர்க்கு -
காற்றாகிய இறகு. அரி கோல் - திருமாலாகிய அம்பு.
கல் - மேருமலை. வல்வாய் எரி - வலிய வாயாகிய எரி,
வல்லாய் என்று பாடம் ஓதுவாரும் உளர்.
|