114. கரத்தான்மலி
சிரத்தான்கரி
யுரித்தாயதொர்
படத்தான்
புரத்தார்பொடி
படத்தன்னடி
பணிமூவர்கட்
கோவா
வரத்தான்மிக
வளித்தானிடம்
வளர்புன்னைமுத்
தரும்பி
விரைத்தாதுபொன்
மணியீன்றணி
வீழிம்மிழ லையே.
7
__________________________________________________
7. பொ-ரை:
பிரமகபாலம் பொருந்திய திருக்கரத்தினன்.
யானையை உரித்ததால் கிடைத்ததொரு
மேற்போர்வையினன். முப்புர அசுரர் அழியத் தன்னடி
பணிந்த அம்முப்புரத்தலைவர் மூவர்கட்கும் மிக்க
வரங்களை அளித்தவன். அப்பெருமானது இடம்,
வளர்ந்தோங்கிய புன்னை மரங்கள் முத்துக்கள்
போல் அரும்பி மலர்ந்து பொன் தாதுக்களை ஈன்று
பச்சை மணிகளைப்போல் காய்த்து அழகு செய்கின்ற
திருவீழிமிழலையாகும்.
கு-ரை: சிரத்தான்
மலி கரத்தான் என மாற்றிப், பிரம கபாலத்தான்
நிறைந்த திருக்கரத்தையுடையவன் எனப் பொருள்
காண்க. படம் - மேற்போர்வை, புரத்தார் பொடிபட -
முப்புரங்களின் வரிசை பொடியாக. தன்னடிபணி
மூவர்கட்கு - தம் திருவடியைப் பணிந்த மேம்பட்ட
அடியவர்களான தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி
என்ற மூவர்கட்கும். ஓவா வரத்தான் மிக அளித்தான்
- சுதர்மன், சுநீதி, சுபுத்தி எனப் பெயரீந்து
வாயிற்காவலராகும் வரத்தால் மிக அருள்
செய்தவன். புரத்தார் பொடிபட என்பதற்கு
முப்புராதிகள் பொடியாயினார் எனப் பொருள்
கொள்ளின் ‘உய்ந்த மூவரில் இருவர் நின்
திருக்கோயிலின் வாய்தல் காவலாளர் என்றேவி‘
என்பதனோடு மாறுகொள்ளும். அன்றியும்
அதிகைப்புராண வரலாற்றொடும் முரணும். ஆதலால்
புரத்தார் பொடிபட எனப் பிரித்தலே சால்புடைத்து.
திரிபுரம் எரிந்த காலத்து அடியவர்கள் மூவர்
அழிந்திலர் என்பதைப் புரம் எரிந்த காலத்து
இவர்கள் மூவரும் கைலாசத்தில் துவாரபாலகராகும்
பதவியைக் கொடுக்கவேண்டும் என வேண்டிக்
கொண்டார்கள் என்னும் தர்மசங்கிதைவசனமும்
வலியுறுக்கும். புன்னை முத்துப் போலரும்பி,
மலர்ந்து, பொன்தாதுக்களை ஈன்று, காய்த்துப்
பச்சை மணிகளையீன்று, அழகு செய்கின்ற மிழலை
எனக்கூட்டிப் பொருள் கொள்க.
|