பக்கம் எண் :

36ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின் ஆசியுரை(முதல் திருமுறை)


“என்னைநினைந்து அடிமை கொண்டு என்இடர்கெடுத்துத்,
தன்னைநினையத் தருகின்றான்"

என்ற பாடலும் இக்கருத்தையே வலியுறுத்துகிறது.

"அவன் அருளாலே அவன்தாள் வணங்கி" என்ற ஆளுடைய அடிகள் வாக்கும் இக்கருத்துப் பற்றியதே.

இந்தக் கருத்தை வலியுறுத்துவார்போல் அப்பரும் எறும்பியூர்த் திருத்தாண்டகத்துள் ‘பன்னியசெந்தமிழறியேன்’ என்ற பாடலில்,

"அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்

அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட

தென்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்

செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே"

என்றருளியுள்ளமை கண்டு மகிழத்தக்கது.

இதற்கு இரண்டாவது பொருள், இனிச் சென்று சேரவேண்டிய திருவேண்டப்படாதவன் இறைவன் என்பது. குறைவிலா நிறைவினன் என்பதாலும், நிறை செல்வத்தியாகேசர் என்பதாலும் இதனைநன்கு உணரலாம்.

முதலில் கண்ட பொருளையும், இரண்டாவது கண்ட பொருளையும் வலியுறுத்துமாப்போலே திருச்சிவபுரம் திருத்தாண்டகத்துள் ‘வானவன்காண்’ என்ற பாடலில் ‘தேனவன்காண் சென்றடையாச் செல்வன்தான்காண்’ என அப்பரும் அருள்வதைக் காண்க.

மூவினைகள்:

திருவாரூரில் பாடிய ‘பாடலன் நான்மறையன்’ என்ற பதிகத்துள் இரண்டாம் பாடலில், "காலையும் மாலையும் போய்ப் பணிதல் கருமமே" என்று கடமையை உணர்த்துகின்றார்.

வழிபாட்டாலும், தேவாரத் திருப்பதிகங்களை ஓதுவதாலும் பழவினை (சஞ்சிதம்), வரு வினை - மேல் எதிர்காலத்து வருவினை, (ஆகாமியம்), இப்பிறப்பில் நாம் அநுபவிக்க இருக்கும் வினை, (பிராரத்தவினை) ஆகிய இவையெல்லாம் தீரும் என்பது ஆளுடைய பிள்ளையாரின் அறிவுரை.