பதிகத்துள் ‘புவிமுதல் ஐம்பூதமாய்’
என்னும் பாடலில் சைவ சித்தாந்தத்துள் காணும் 24
தத்துவங்களையும் மிக எளிமையாகக் குறிப்பிட்டுள்ளமை
கண்டு மகிழலாம்.
ஆன்ம தத்துவம்:
மண், நீர், தீ, வெளி,
காற்று ஆகிய ஐம்பூதங்களும், அவற்றின் நுட்பமாயுள்ள
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும்
ஐந்து புலன்களும், (தன்மாத்திரை) இவை தோன்றுதற்கு
வாயிலாக உள்ள ஞானேந்திரியங்களாகிய மெய்,
வாய், கண், மூக்கு, செவி என்ற அறிவுப்
பொறிகள் ஐந்தும்; வாக்கு, பாதம், கை,
எருவாய், கருவாய் என்னும் தொழிற்பொறிகள்
ஐந்தும்; அந்தக் கரணங்கள் எனப்படும் மனம்,
புத்தி, சித்தம் அகங்காரங்களாகிய உட்கருவிகள்
நான்கும் ஆக இருபத்துநான்கும் ஆன்மாவிற்கு (உயிர்க்கு)
உடலாக அமைந்து அறிவு, இச்சை செயலுடன் உயிர் தொழிற்படத்
துணை செய்வனவாம். இக்கருத்தமைந்துள்ள பாடல்
பகுதி காண்க.
"புவிமுதல்ஐம் பூதமாய்ப்,
புலன்ஐந்தாய்,
நிலன் ஐந்தாய்க்,
கரணம் நான்காய்
அவையவைசேர் பயன்உருவாய்
அல்லஉரு
வாய்நின்றான் அமருங்கோயில்"
நிலன் ஐந்தாய் என்பது
அறிவுப்பொறி ஐந்திற்கும் தொழிற் பொறி ஐந்திற்கும்
இடமாய் நிற்பதால் நிலன் ஐந்தாய் என்றாரேனும்
பத்தாகக்
கொள்க.
பச்சைப் பதிகம்:
"போகம் ஆர்த்த
பூண்முலையாள்"
என்னும் திருநள்ளாற்றுத் திருப்பதிகம் சிவநெறிக்கு
உயிர்ப்பளித்த சிறப்புடையது. சைவரும்,
சமணரும் அவரவர் தெய்வம் பற்றிய உண்மையை எழுதி
அனலில் இடச்செய்த போது ஞானசம்பந்தர் தாம்
முன்பே பாடிய ஓலைச் சுவடியில் கயிறுசாத்திப் பார்த்தார்;
"போகமார்த்த" எனும் இப்பதிகம் கிடைத்தது.
இதனைத் தீயில் இட்டு மேலும் "தளிரிள வளரொளி"
என்னும் பதிகம் பாடினார் ஞானசம்பந்தர். ‘போகமார்த்த’
எனும் ஏடு எரியாமல் பச்சென்றிருந்தது. அதனால்
இப்பதிகத்தை இன்றும் பச்சைப் பதிகம் என்றே
குறிப்பிடுகின்றனர். இதில் என்ன உண்மை
சொன்னார் ஞானசம்பந்தர் என்று காண்போம்.
|