சிவபெருமான் போகவடிவம், வேகவடிவம்,
யோகவடிவம் என்னும் மூவகை வடிவம் கொள்வதை இப்பதிகத்துள்
உணர்த்துகின்றார். போகியாயிருந்து உயிர்கட்குப்
போகத்தைத் தருகின்றார். வேகியாய் இருந்து
அவரவர் செய்த வினைகளை வீட்டி அருள்கின்றார்.
யோகியாயிருந்து முத்தியை அருள்கிறார். இப்பதிகத்துள்
இம்முத்திறக் குறிப்பும் அமைந்துள்ளமையைக் காணலாம்.
உயிர்கள் அநுபவிக்க இருக்கும் போகத்தைப் பாலாக
அம்மை தமது மார்பகத்தில் உள்ள முலைத்தடத்தால்
உலகஉயிர்கட்கு வழங்குகிறார் என்னும் குறிப்பு
மருத்துவ இயலாரும் வியந்துபோற்றும் சிறப்புடையதாகும்.
தாய்ப்பால் இல்லையேல் ஜீவராசிகளுக்கு வாழ்வே
இல்லை. அனைத்துச் சீவர்களும் நோய்க்கே
இருப்பிடமாவர் என்பது புலன் ஆதல் அறிக. தாய்ப்பாலில்தான்
நோய்த் தடுப்பாற்றல் மிகுதியாகவுள்ளது. குழந்தைகட்கு
ஓராண்டுக் காலம் தாய்ப்பால் வழங்கினால் சொட்டுமருந்து
எதுவும் தேவையில்லை.
தன்னைப்போல் ஆக்குபவன்:
‘பந்தத்தால்’
எனத்தொடங்கும் திருக்கழுமலத் திருப்பதிகத்துள்,
ஏழாம் பாடலில் மூன்றாம் வரியில் ‘திகழ்ந்தமெய்ப்பரம்பொருள்,
சேர்வார்தாமே தானாகச்செய்யுமவன் உறையுமிடம்’
என்று அருளியுள்ளமை சிந்திக்கத்தக்கது.
இறைவனைச் சார்கின்ற உயிர்கட்கு இப்பிறவிக்கு வேண்டிய
சுகபோகங்களைக் கொடுப்பதுடன் படிப்படியாக உயர்த்தி
அவ்வுயிர்களைத் தானாகவே செய்யும்
பெருங்கருணையாளன் என்பதை இப்பாடலில் உணர்த்துகின்றார்.
இதே கருத்தை அப்பர் பெருமானும்,
திருப்புள்ளிருக்கு வேளுர்த் திருத்தாண்டகமாகிய ‘இருளாய
உள்ளத்தின்’ என்ற பாடலில் ‘தெருளாத
சிந்தைதனைத் தெருட்டித், தன்போல் சிவலோக
நெறி அறியச் சிந்தை தந்த அருளானை’ என்று
அருள்கின்றார். எனவே மும்மலக் கட்டுண்டுள்ள
உயிர்களை இறைவன் தன்னைப்போல் ஆக்குதற்கு இவ்வுலகத்தைப்
படைத்துக் காத்து அழித்து அருள்புரிகின்றான் என்பது
நன்கு விளங்குகின்றதன்றோ!
|