பக்கம் எண் :

 15. திருநெய்த்தானம்389



நிறையார்புனல் நெய்த்தானன்நல்

நிகழ்சேவடி பரவக்

கறையார்கதிர் வாளீந்தவர்

கழலேத்துதல் கதியே. 8

160. கோலம்முடி நெடுமாலொடு

கொய்தாமரை யானும்

சீலம்மறி வரிதாயொளி

திகழ்வாயநெய்த் தானம்

காலம்பெற மலர்நீரவை

தூவித்தொழு தேத்தும்

ஞாலம்புக ழடியாருடல்

உறுநோய்நலி யாவே. 9

__________________________________________________

இலங்கைக்குரிய மன்னனாகிய இராவணன் இருபது தோள்களும் நெரியுமாறு காலை ஊன்றிப் பின் அவன் புனல் நிறைந்த நெய்த்தானப் பெருமானது விளங்கும் திருவடிகளைப் பரவ அவனுக்கு முயற்கறையை உடைய சந்திரனின் பெயரைப் பெற்ற சந்திரகாசம் என்ற வாளை ஈந்த அப்பெருமான் திருவடிகளை ஏத்துதலே, ஒருவற்கு அடையத்தக்க கதியாம்.

கு-ரை: அறை - ஓசை. இறை ஆர - மணிக்கட்டுப் பொருந்த, நெய்த்தானன் - அன் தவிர்வழி வந்த சாரியை; நெய்த்தானத்தவனாகிய இறைவன். கறையார் கதிர்வாள் ஈந்த - சந்திரன் பெயரைப் பொருந்திய வாளைத் தந்த என்றது சந்திரஹாசம் என்னும் வாளைத் தந்த என்பதாம். அவர் கழல் ஏத்துதல் கதியே - அந்த இறைவனுடைய கழலை ஏத்துதலே மீட்டும் அடையத்தக்க கதியாம்.

9. பொ-ரை: அழகிய முடியை உடைய திருமாலும், கொய்யத்தக்க தாமரைமலர் மேல் விளங்கும் நான்முகனும் தன் இயல்பை அறிதற்கியலாத நிலையில் ஒளிவடிவாய்த் திகழ்ந்த நெய்த்தானப் பெருமானை விடியற் பொழுதிலே நீராட்டி மலர் சூட்டித் தொழுதேத்தும் உலகு புகழ் அடியவரை உடலுறும் நோய்கள் நலியா.

.கு-ரை: கோலம் முடி - அழகிய கிரீடம், சீலம் - சௌலப்யம் என்னும் எளிமைக்குணம். காலம் பெற - விடியலிலேயே. உடலை நோய் நலியா என்க. உறுநோய் - பிராரத்த வினையான் வரும் துன்பம்.