புலன்கள்தமை வென்றார்புக
ழவர்வாழ்புள மங்கை
அலங்கல்மலி சடையானிடம்
ஆலந்துறை யதுவே. 8
171. செறியார்தரு வெள்ளைத்திரு
நீற்றின்றிரு முண்டப்
பொறியார்தரு புரிநூல்வரை
மார்பன்புள மங்கை
வெறியார்தரு கமலத்தயன்
மாலுந்தனை நாடி
அறியாவகை நின்றானிடம்
ஆலந்துறை யதுவே. 9
__________________________________________________
இடம், வேதங்களை முறையாகக் கற்றறிந்து
ஓதித் துதித்தலோடு புலன்களை வென்ற புகழுடைய அந்தணர்
வாழ்வதும் மாலை அணிந்த சடைமுடி உடைய சிவபிரானுக்கு
இடமாயிருப்பதும் ஆகிய ஆலந்துறையிலுள்ள புள்ளமங்கையாகும்.
கு-ரை: மனன் - மன்னன். தொகுத்தல்
விகாரம். எழில் - எழுச்சி. விலங்கலிடை -
மலையின் அடியில். புலன்கள் தம்மை வென்றார் -
புலன்களாகிய பொறிகளைத் தன்வயமாக்கவிடாமல் வென்ற
முனிவர்கள். அலங்கல் - மாலை.
9. பொ-ரை: வெண்மையான திருநீறு
மூன்று பட்டைகளாய்ச் செறிய உத்தம இலக்கணம் ஆகிய
மூன்று வரி பொருந்திய, முப்புரிநூல் அணிந்த
மலை போன்ற திண்ணிய மார்பினை உடையவனும் மணம்
கமழும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகன், திருமால்
ஆகியோர் தன்னைத் தேடி அறியாவகை ஓங்கி நின்றவனுமாகிய
சிவபெருமானுக்கு உரிய இடம், ஆலந்துறையிலுள்ள
புள்ள மங்கையாகும்.
கு-ரை: செறி ஆர்தரு - நெருங்குதல்
பொருந்திய. திருமுண்டம் - அழகிய திரிபுண்டரம்.
பொறியார்தரு மார்பன் எனக் கூட்டுக. உத்தம
விலக்கணம் பொருந்திய மார்பு. (சிந்தாமணி
1462, 1706) வெறி - மணம். அறியாவகை நின்றான்
- (அவர்கள்) ஞானக் கண்ணினிற் சிந்தையில் நாடவேண்டிய
பதியை ஊனக் கண்ணினிற் காணலுற்றார்களாதலின் அறியா
வண்ணம் சோதிவடிவாய் நின்றவன்.
|