179. நெறிநீர்மையர் நீள்வானவர்
நினையுந்நினை வாகி
அறிநீர்மையி லெய்தும்மவர்க்
கறியும்மறி வருளிக்
குறிநீர்மையர் குணமார்தரு
மணமார்தரு குன்றில்
எறிநீர்வயல் புடைசூழ்தரு
மிடும்பாவன மிதுவே. 6
__________________________________________________
குன்று என்பது குன்றளூர் என்பதன் மரூஉ.
எந்தாய் என - அனைத்துயிரும் எமது தாயே என்ன.
எந்தை என்பதன் விளியுமாம். தாயும் தந்தையுமாக
ஓர் உருவிலேயே நின்று அருள்வது இறைவற்குச் சிறப்பியல்பாகலின்
எந்தாய் எனச் சொல் ஒன்றானே நயம்தோன்றக் கூறியவாறு.
‘தோடுடைய செவியன்‘ என்றதற்கேற்ப எந்தாய் என
இருந்தான் என ஆண்பால் முடிபேற்றவாறு.
6. பொ-ரை: தவ ஒழுக்கத்தால் சிறந்த
முனிவர்கள், உயர்ந்த தேவர்கள் ஆகியோர் நினையும்
நினைவுப் பொருளாகி, ஞானத்தால் தொழும் மேலான
ஞானியர்கட்குத் தன்னை அறியும் அறிவை நல்கிச்
சிவலிங்கம் முதலான குறிகளில் இருந்து அருள் புரிபவனாகிய
சிவபெருமான் இடம், தூய சிந்தனையைத் தரும்
மணம் கமழ்கின்ற குன்றளூரில் வரப்பை மோதும் நீர்
நிரம்பிய வயல்கள் புடை சூழ்ந்து விளங்கும் இடும்பாவனமாகிய
இத்தலமேயாகும்.
கு-ரை: நெறிநீர்மையர் - ஒழுக்கத்தின்கண்
நிற்கும் இயல்பினையுடைய முனிவர்கள், முனிவர்க்கும்
தேவர்க்கும் தியானப் பொருளாய் இருப்பார் என்பது
குறித்தவாறு. இவர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள்
ஞானிகள், அவர்களை ‘அறிநீர்மையினில் எய்தும்
அவர்‘ எனக் குறித்தார்கள். அதாவது அறிவானும்
அறியப்படும் பொருளும் அறிவுமாகிய மூன்றும் தனிநிலையற்று
ஒன்றாயிருந்து அறியும் பரமஞானிகளுக்கு அறியும் அறிவருளி
- சிவமாகிய தன்னையறியத் தக்க அறிவும் அருள,
என்றது இறைவன் அறியுமாறு அறிந்தாலன்றி ஆன்மாக்கள்
தாமாக அறிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாதன என்பது.
"உணருமா உணரே" என்பதும் இப்பொருட்டு,
குறிநீர்மையர் - அங்ஙனம் அவனருளே கண்ணாகக்
காணும் குறிக்கண் நிற்கும் சிவஞானிகள். குணமார்தரும்
- இறைவனுக்குள்ள ஐந்தொழில் ஆற்றுதல் ஒழிந்த
ஏனைய குணங்களைப் பொருந்தவைக்கும்.
|