பக்கம் எண் :

408திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


அலைகளால் அடிவீழ்ந்து இறைஞ்சும் இடும்பாவனத்து இறைவனை, திருவடிகளையே சிந்தித்து ஆய்வு செய்யும் அந்தணர்கள் வாழும் காழிப் பதிக்கு அணியாய ஞானசம்பந்தன் முறையோடு அருளிய இப்பாடல்களை ஓத, வினைகள் நீங்கும். தானே - அசை.

கு-ரை: கொடியார் நெடுமாடக் குன்றளூர் - கொடிகள் கட்டிய நீண்ட மாடங்களோடு கூடிய குன்றளூரினது. குன்றளூர் என்பது இடும்பனது தலைநகரம். இதனையே சுவாமிகள் பெயர்க்குறையாக்குன்றில் என்று குறித்தவாறு, பல விடங்களில் காண்க. கோலக்கரை இடியார்கடல் அடிவீழ்தரும் இடும்பாவனம் - அழகிய கரையை இடித்தலைப் பொருந்திய கடல் அடிக்கண் மடங்கி வீழும் இடும்பாவனம். அடி ஆயும் அந்தணர் - திருவடியின்பத்தைச் சிந்திக்கும் அந்தணர்கள். படியாற் சொன்ன பாடல் - அவர் அவர் பக்குவத்திற்கேற்ப முறையால் சொன்ன பாடல். ஊதப்பறையும் மணல்போலப் பாடல் சொல்லப் பறையும் வினை என்பதாம்.

திருத்தொண்டர் புராணம்

திருஞானசம்பந்தர் புராணம்

கண்ணார்ந்த திருநுதலார் மகிழ்ந்தகடிக் குளமிறைஞ்சி
எண்ணார்ந்த திருவிடும்பா வனமேத்தி எழுந்தருளி
மண்ணார்ந்த பதிபிறவும் மகிழ்தரும்அன் பால்வணங்கிப்
பண்ணார்ந்த தமிழ்பாடிப் பரவியே செல்கின்றார்.

- சேக்கிழார்.

பூவாளூர்ப் புராணம்

மட்டுவிரி நறுந்துளப மாலாலும்

அயனாலு மறையி னாலும்

சுட்டியறி யாதபெருஞ் சுகப்பொருளை

யொருவிரலாற் சுட்டிக்காட்டி

மொட்டிளமென் முலையுமையாள் கொடுப்பவருந்

தியவமிழ்த முழுது மாங்கே

கொட்டியது போற்கவிதை கொழித்தகவு

ணியர்மணிதன் குலத்தாள் போற்றி.

- கச்சியப்ப சுவாமிகள்.