18. திருநின்றியூர்
பதிக வரலாறு:
புள்ளிருக்குவேளூரை வணங்கிய புகலிவேந்தர்
புகழான் நீண்ட நின்றியூருக்கு எழுந்தருளினார்கள்.
அங்கே எழுந்தருளியுள்ள சிவபெருமான் திருவடிகளை ஆராக்காதலோடு
வணங்கினார்கள். ‘சூலம் படை‘ என்னும் பதிகத்தையருளிச்
செய்தார்கள். அதில் நின்றியூர் நிமலரையல்லாது
எனது உள்ளம் வேறொன்றையும் உணராது எனவும், பாதம்
பணிவார் அச்சம் பழி பாவம் இலராவர் எனவும்
குறிப்பிடுவது அன்பருள்ளத்திற்குப் பெருவிருந்து.
பண்: நட்டபாடை
பதிக எண்: 18
திருச்சிற்றம்பலம்
185. சூலம்படை சுண்ணப்பொடி
சாந்தஞ்சுடு நீறு
பாலம்மதி பவளச்சடை
முடிமேலது பண்டைக்
காலன்வலி காலின்னொடு
போக்கிக்கடி கமழும்
நீலம்மலர்ப் பொய்கைநின்றி
யூரின்னிலை யோர்க்கே. 1
__________________________________________________
1. பொ-ரை: முன்னொரு காலத்தில்
காலனின் வலிமையைக் காலால் உதைத்துப் போக்கி,
மணம் கமழும் நீல மலர்கள் மலர்ந்த பொய்கைகளை
உடைய திருநின்றியூரில் நிலையாக எழுந்தருளியுள்ள
இறைவற்குப் படைக்கலன் சூலம். சுண்ணப்பொடியும்,
சாந்தமும், திருநீறே. பால் போலும் வெண்மையான
பிறைமதி அவரது செந்நிறச் சடைமுடியின் மேலது.
கு-ரை: காலன் வலிபோக்கி, நின்றியூரின்
நிலையோர்க்கு, சூலம் படை, சுண்ணப்பொடி,
சாந்தம், சுடுநீறு, மதி முடிமேலது என்க.
நிலையோர் - நிலைபெறுதலையுடையார். சுண்ணப்பொடியும்
|