பக்கம் எண் :

 18. திருநின்றியூர்413



190. மூரன்முறு வல்வெண்ணகை

யுடையாளொரு பாகம்

சாரன்மதி யதனோடுடன்

சலவஞ்சடை வைத்த

வீரன்மலி யழகார்பொழில்

மிடையுந்திரு நின்றி

யூரன்கழ லல்லாதென

துள்ளம்முண ராதே. 6

191. பற்றியொரு தலைகையினி

லேந்திப்பலி தேரும்

பெற்றியது வாகித்திரி

தேவர்பெரு மானார்

சுற்றியொரு வேங்கையத

ளோடும்பிறை சூடும்

நெற்றியொரு கண்ணார்நின்றி

யூரின்னிலை யாரே. 7

__________________________________________________

6. பொ-ரை: புன்முறுவலைத் தரும் வெண்மையான பற்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, சடைமுடியில் சார்ந்துள்ள பிறைமதியோடு கங்கையை வைத்துள்ள வீரனும் அழகு மலிந்த பொழில்கள் செறிந்த திருநின்றியூரில் எழுந்தருளியவனுமாகிய சிவபிரான் திருவடிகளை அல்லாது எனது உள்ளம் வேறு ஒன்றையும் உணராது.

கு-ரை: மூரல் முறுவல் - மிகச் சிறிய புன்சிரிப்பு, சலவம் - கங்கை. கழலைப்பற்றிய உள்ளத்திற்கு, வேறொன்றையும் உணர முடியாமையானும் உணர்ந்து ஆகவேண்டுவது இன்மையானும் உள்ளம் உணராது என்றார்.

7. பொ-ரை: பிரமனது தலைகளில் ஒன்றைப் பறித்து அதனைக் கையினில் ஏந்திப் பலிகேட்கும் இயல்பினராய்த் திரிகின்ற தேவர் தலைவரும் புலித்தோலை இடையில் சுற்றியிருப்பதோடு முடியில் பிறைமதியைச் சூடியவரும், நெற்றியில் ஒரு கண்ணை உடையவரும் ஆகிய பெருமானார் திருநின்றியூரின்கண் நிலையாக எழுந்தருளியுள்ளார்.