19. திருக்கழுமலம்
திருவிராகம்
பண் : நட்டபாடை
பதிக எண் : 19
திருச்சிற்றம்பலம்
195. பிறையணி படர்சடை முடியிடை
பெருகிய புனலுடை யவனிறை
இறையணி வளையிணை முலையவள்
இணைவன தெழிலுடை யிடவகை
கறையணி பொழினிறை வயலணி
கழுமல மமர்கன லுருவினன்
நறையணி மலர்நறு விரைபுல்கு
நலமலி கழல்தொழன் மருவுமே. 1
196. பிணிபடு கடல்பிற விகளறல்
எளிதுள ததுபெரு கியதிரை
அணிபடு கழுமல மினிதமர்
அனலுரு வினனவிர் சடைமிசை
__________________________________________________
1. பொ-ரை: பிறை அணிந்த விரிந்த
சடைமுடியின்கண் பெருகிவந்த கங்கையை உடைய இறைவனும்,
முன்கையில் அழகிய வளையலை அணிந்த உமையம்மையின்
இரண்டு தனபாரங்களோடு இணைபவனும், அழகிய
இடவகைகளில் ஒன்றான நிழல்மிக்க பொழில்கள் நிறைந்ததும்
நெல் வயல்கள் அணி செய்வதுமாகிய திருக்கழுமலத்தில்
எழுந்தருளியுள்ள அழல் போன்ற சிவந்த மேனியனுமாகிய
சிவபிரானின் தேன்நிறைந்த மலர்களின் நறுமணம் செறிந்த
அழகிய திருவடிகளைத் தொழுதல் செய்மின்கள்.
கு-ரை: இறை - முன் கை. இணை முலையவள்
இணைவனது - பரஞானம் அபரஞானம் என்ற இரண்டு முலைகளையுடைய
உமாதேவியோடு இணைபவனாகிய சிவனது. கறையணிபொழில்
- நிழல் மிக்க பொழில். நறையணிமலர் - தேனோடுகூடிய
அழகிய மலர். உலகீர்! இடமாகிய கழுமலம் அமர்
கனல் உருவினனது கழல் தொழுதலை மருவும் எனக்கூட்டுக.
மருவும் - பொருந்துங்கள்.
2. பொ-ரை: இடைவிடாமல் நம்மைப்
பிணிக்கும் கடல் போன்ற
|