பக்கம் எண் :

420திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)



199. தலைமதி புனல்விட வரவிவை

தலைமைய தொருசடை யிடையுடன்

நிலைமரு வவொரிட மருளின

னிழன்மழு வினொடழல் கணையினன்

மலைமரு வியசிலை தனின்மதி

லெரியுண மனமரு வினனல

கலைமரு வியபுற வணிதரு

கழுமல மினிதமர் தலைவனே. 5

__________________________________________________

பொருள்தரு படுகளிறினது - பல பொருள்களைக் கொண்டு வருகின்ற இறந்த யானையினது. உரி - தோல். இவருடைய மேனியின் செவ்வொளியைக் களிற்றின் கருந்தோல் புதைத்தது என்பதாம். மனைகுடவயிறு உடையன குறள் படை - வீட்டுக்குடம் போன்ற வயிறு உடையனவாகிய பூதப்படைகள். கதிர் மதியினன் - சூரியனையும் சந்திரனையும் தமது திருக்கண்களாகப் படைத்தவன். உடலினன், உடையவன், மதியினன், கழல்கள். வினைகெட மனநினைவது முடிகெனின், நனிதொழுது எழு எனக்கூட்டுக. மனநினைவிற்கு எல்லாம் காரணமாகிய வினைகள் கெடவும், மனம் நினைந்தது நிறைவேறவும், விரும்பின், கழல்களைத்தொழுதெழு என்று நெஞ்சை நோக்கி அறிவித்தவாறு. முடிக எனின் என்பது முடிகெனின் எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது. முடியுமாயின் எனப் பொருள் காண்பதும் உண்டு. பொருந்துமேல் கொள்க.

5. பொ-ரை: நல்ல கலைமான்கள் பொருந்திய சிறுகாடுகள் புறத்தே அழகு பெறச் சூழ்ந்துள்ள கழுமலத்தில் இனிதாக எழுந்தருளிய இறைவன், ஒரு நாட்பிறை, கங்கை, நஞ்சு பொருந்திய பாம்பு ஆகியவற்றுக்குத் தன் தலைமையான சடைக் காட்டின் நடுவில் ஒன்றாக இருக்குமாறு இடம் அருளியவன். ஒளி பொருந்திய மழுவோடு அழல் வடிவான அம்பினை மேருமலையாகிய வில்லில் பூட்டி எய்தலால் திரிபுரங்கள் எரியுண்ணுமாறு மனத்தால் சிந்தித்தவன்.

கு-ரை: இடமருளினன், கணையினன், மருவினன் தலைவன் எனப்பொருந்த முடிக்க, தலைமதி - ஒருநாட்பிறை. தலைமையது ஒருசடைஇடை - தலைமையதாகிய சடைக்காட்டின் நடுவில் பகைபட்ட பொருளாகிய மதி அரவு இவைகளைப் பகை நீங்கி வாழ ஓரிடத்து அருளினன் என்பது குறித்தவாறு. நிழல் மழு - ஒளிவிடுகின்ற மழு. மலை மருவிய சிலைதனில் - மேருமலையாகிய வில்லில்.