பக்கம் எண் :

 19. திருக்கழுமலம்423



203. கொழுமல ருறைபதி யுடையவன்

நெடியவ னெனவிவர் களுமவன்

விழுமையை யளவறி கிலரிறை

விரைபுணர் பொழிலணி விழவமர்

கழுமல மமர்கன லுருவினன்

அடியிணை தொழுமவ ரருவினை

எழுமையுமிலநில வகைதனில்

எளிதிமை யவர்விய னுலகமே. 9

__________________________________________________

ஊர்தியனும் ஆகிய பெருமான் உமையம்மையோடு உறையும் பதி, கடல் அலைகளையுடைய உயர்ந்த கழுமலம் எனப்படும் பெரிய நகராகும்.

கு-ரை: கடல் என நிறநெடு முடியவன் - கடலை ஒத்த நிறத்தையுடைய நீண்ட கிரீடத்தை யணிந்தவனாகிய இராவணன். அடுதிறல் தெற - பிறரை வருத்தும் வலிமை தொலைய என்றுமாம். அடி சரண் என - திருவடியே அடைக்கலமாவது என்று கூற. அடல் நிறை படை - கொலை நிறைந்த படையாகிய சந்திரகாசம் என்னும் வாள். அரவு அரையினன் - பாம்பை இடுப்பிலணிந்தவன். கடல் மறுகு உடை - கடலுங் கலங்குதலை உடையகாலத்து.

9. பொ-ரை: செழுமையான தாமரை மலரை உறையும் இடமாகக் கொண்ட பிரமன், திருமால் ஆகிய இவர்களும் சிவபெருமானது சிறப்பைச் சிறிதும் அறியார். அப்பெருமான், மணம் பொருந்திய பொழில்கள் சூழப் பெற்றதும் அழகிய விழாக்கள் பல நிகழ்வதுமாகிய கழுமலத்துள் எழுந்தருளிய அழல் உருவினன். அப்பெருமானுடைய திருவடி இணைகளைத் தொழுபவர்களின் நீங்குதற்கரிய வினைகள் இப்பூவுலகில் ஏழு பிறப்பின்கண்ணும் இலவாகும். இமையவர்களின் பெரிய உலகத்தை அடைதல் அவர்கட்கு எளிதாகும்.

கு-ரை: கொழுவிய தாமரைமலரை உறையுமிடமாக உடைய பிரமன். நெடியவன் - திருமால். அவன் - சிவன். விழுமை - பெருமை. இறையளவு அறிகிலர் எனவும். நிலவகைதனில் வினை எழுமையும் இல. இமையவர் வியன் உலகம் எளிது எனவும் இயைத்துப் பொருள்காண்க.