பக்கம் எண் :

426திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


20. திருவீழிமிழலை

திருவிராகம்

பண்: நட்டபாடை

பதிக எண்: 20

திருச்சிற்றம்பலம்

206. தடநில வியமலை நிறுவியொர்

தழலுமிழ் தருபட வரவுகொ

டடலசு ரரொடம ரர்களலை

கடல்கடை வுழியெழு மிகுசின

விடமடை தருமிட றுடையவன்

விடைமிசை வருமவ னுறைபதி

திடமலி தருமறை முறையுணர்

மறையவர் நிறைதிரு மிழலையே. 1

__________________________________________________

1. பொ-ரை: பெரியதாகிய மந்தரமலையை மத்தாக நிறுத்தி அழல் போலும் கொடிய நஞ்சை உமிழும் படத்தோடு கூடிய வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கட்டி வலிய அசுரர்களோடு தேவர்கள் அலைகள் பொருந்திய திருப்பாற்கடலைக் கடைந்த விடத்துத் தோன்றிய உக்கிரமான ஆலகாலம் என்னும் நஞ்சு அடைந்த கண்டத்தை உடையவனும், விடையின்மீது வருபவனும் ஆகிய சிவபிரான் உறையும் தலம். நான்மறைகளை முறையாக ஓதி உணர்ந்த உறுதி வாய்ந்த மறையவர் நிறைந்துள்ள திருவீழிமிழலையாகும்.

கு-ரை: தேவர்கள் பாற்கடல் கடைந்த வரலாறு முதல் மூன்று அடிகளில் குறிக்கப்பெறுகிறது. தடம் நிலவிய மலை - விசாலமாகிய மந்தர மலை.

அரவுகொடு அடல் அசுரரொடு அமரர்கள் அலை கடல் கடைவுழி எனப் பிரிக்க. திடம் - மன உறுதி. மறையவர் என்ற பெயர் மறையைமுறையே உணர்தலால் வந்தது எனக் காரணக்குறியாதல் விளக்கியவாறு.