221. சினமலி யறுபகை மிகுபொறி
சிதைதரு வகைவளி நிறுவிய
மன்னுணர் வொடுமலர் மிசையெழு
தருபொரு ணியதமு முணர்பவர்
தனதெழி லுருவது கொடுவடை
தகுபர னுறைவது நகர்மதிள்
கனமரு வியசிவ புரநினை
பவர்கலை மகள்தர நிகழ்வரே. 5
__________________________________________________
நினைவொடு - ஈசுவர தியானத்தோடு.
நியதமும் - ஒழுங்காக. குறைவிலபதம் - சாமீபம்,
வனபதி - அழகிய நகரம். சிறைபுனல் - மதகுகளோடு
கூடிய புனல். இது கிரியாவான்கள் பெறுபயன்
கூறியது.
5. பொ-ரை: காமம், குரோதம்,
லோபம், மோகம், மதம், மாற்சரியம்
எனப்படும் ஆறு பகைகளையும் வென்று, மெய்,
வாய், கண், மூக்கு, செவி ஆகிய
ஐம்பொறிகளையும் அடக்கும் வகையில், காற்றை
நிறுத்தியும் விடுத்தும் செய்யப்படும்
பிராணாயாமத்தைப் புரிந்தும்,
தியானித்தலால் உள்ளத்தில் தோன்றியருளும்
ஒளிப் பொருளாகிய சிவபெருமானை நாள்தோறும்
உணர்பவராகிய யோகியர்கட்குத் தனது எழிலுருவாகிய
சாரூபத்தைத் தந்தருளும் சிவபிரான் உறைந்தருளும்
நகர், மேகந் தவழும் மதில்கள் சூழ்ந்த
சிவபுரமாகும். அதனை நினைபவர், கலைமகள்
தன் அருளைத் தரவாழ்வர்.
கு-ரை: இது அகப்பகை ஆறும் வென்று
ஐம்பொறி அடக்கி, பிராணவாயுவை
ஒழுங்குபடுத்திய யோகியர்க்குச் சாரூபந் தரும்
பரசிவன் பதியாகிய சிவபுரத்தை நினைப்பவர்
சாரூபர்களாவார்கள் என்கின்றது. சினமலி
அறுபகை - கோபம் முதலிய உட்பகையாறும், இதனை
அரிஷட்வர்க்கம் என்பர் வடநூலார். பொறி -
ஐம்பொறிகள். பொறிகள் புலன்களைச் சென்று
பற்றுவதைத் தடுப்பது பிராணாயாமம் ஒன்றே
என்பதாம். மனன் உணர்வு - தியானம். மலர்
மிசை எழுதரு பொருள் -
பிரமரந்தரத்தின்கண்ணதாகிய சகஸ்ரதளத்தையுடைய
தாமரை மலரின்மேல் எழுந்தருளியிருக்கும்
பேரொளிப் பிழம்பாகிய பொருளை. நியதமும்
உணர்பவர் - அனவரதமும் அறிபவர்கள். தனது
எழில் உருவு கொடு - தன்னுடைய அழகிய வடிவத்தைக்
கொண்டு என்றது கண்டக்கறையும் கங்கையும் ஒழிந்த
சாரூபத்தை. கனம் - மேகம்.
|