பணியுற வெளியுரு வியபர
னவனுரை மலிகட றிரளெழும்
மணிவள ரொளிவெயின் மிகுதரு
மறைவன மமர்தரு பரமனே. 9
237. இயல்வழி தரவிது செலவுற
வினமயி லிறகுறு தழையொடு
செயன்மரு வியசிறு கடமுடி
யடைகையர் தலைபறி செய்துதவம்
முயல்பவர் துவர்பட முடல்பொதி
பவரறி வருபர னவனணி
வயலினில் வளைவள மருவிய
மறைவன மமர்தரு பரமனே. 10
__________________________________________________
அறிதற்கு அரியதொரு தன்மையில் அனல்
செறிந்த பிழம்புருவத்தோடு தோன்ற அதனைக் கண்டு
அவ்விருவரும் அஞ்சித் துதி செய்து பணிய,
வானவெளியைக் கடந்த பேருருவத்தோடு காட்சி
நல்கிய பரனாகிய அவன் நுரைமிக்க கடல்
திரட்சியில் தோன்றும் மணிகளின் வளர்
ஒளியினால் வெயிலொளி மிகுந்து தோன்றும்
மறைவனத்தில் அமரும் பரமன் ஆவான்.
கு-ரை: மறைவனத்துப் பரமனே அயனும்
மாலும் அறியொண்ணாதபடி அண்ணாமலையாய்,
அவர்கள் அச்சத்தோடு துதி செய்ய வெளிப்பட்டு
உருவங்கொண்ட பரன் என்கின்றது. மலர் மகள்
தலைமகன் - திருமால். பரிசு - தன்மை. எரி
திணிதரு திரள் உரு - செறிவான தீப்பிழம்பின் வடிவு,
வெளி உருவிய - ஆகாயத்தைக் கடந்த, நுரை
மலிகடல் - நுரைமலிந்த கடல்.
10. பொ-ரை: உலக இயல்பு கெடுமாறு
நடை உடை பாவனைகளால் வேறுபடத் தோன்றிப் பல
மயில்களின் தோகைகளைக் கொண்டு வழிகளை
உயிரினங்களுக்கு ஊறு வாராதபடி தூய்மை செய்து
நடத்தலைச் செய்து சிறிய குண்டிகை வைக்கப்பட்ட
உறியை ஏந்திய கையராய்த் தலையைப் பறித்து
முண்டிதமாக்கிக் கொண்டு தவம் முயலும் சமணர்களும்,
துவராடையால் உடலை மூடியவர்களாகிய புத்தர்களும்
அறிதற்கரிய பரனாகிய அவன், அழகிய வயலில்
சங்கீன்ற முத்துக்கள் நிறைந்துள்ள மறைவனத்தில்
அமர்ந்துறையும் பரமன் ஆவான்.
|