23. திருக்கோலக்கா
பதிக வரலாறு :
ஞானபோனகராகிய பிள்ளையார் தமது
காழித் தந்தையாரையும் ஞானப்பால் தந்த தாயாரையும்
வணங்கிப் பக்கத்திலுள்ள திருக்கோலக்காவிற்கு
வழிபடச் சென்றார். அங்கே திருக்கோயிலை வலஞ்செய்து
கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் செம்பொருளாகிய
வேதவிழுப்பொருளை, நீலகண்டப் பெருமானைப் பொருளாகக்கொண்டு
‘மடையில் வாளைபாய’ என்னும் பதிகத்தால் கைத்தாளம்
இட்டுப்பாடி
யருளினார். அதனைக்கண்ட இறைவன் கனிந்து திருவைந்தெழுத்தெழுதிய
செம்பொற்றாளத்தை ஈந்தருளினார். தாளம் வையம்
எல்லாம் உய்யவரும் மறைச்சிறுவர் கைத்தலத்து வந்தது.
அவற்றைப் பிள்ளையார் கையேற்றுத் திருமுடிமேல் வைத்து
ஏழிசையுந்தழைத்தோங்க இன்னிசைப் பதிகம்
பாடியருளினார். இப்பதிகத்தின் திருக்கடைக்காப்புச்
செய்யுளைச் சேக்கிழார் பெருமான் ‘தக்கதிருக்கடைக்காப்பு’
என்கிறார்கள்.
பண்: தக்கராகம்
பதிக எண் : 23
திருச்சிற்றம்பலம்
239. மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீள்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ. 1
__________________________________________________
1. பொ-ரை: நீரைத் தேக்கி
வெளிவிடும் மடையில் வாளை மீன்கள் துள்ளிப்
பாயுமாறு பெண்கள் கையால் குடைந்து நீராடும்
பொய்கைகளை உடைய திருக்கோலக்காவில் எழுந்தருளியுள்ள
இறைவன், சடைமுடியையும், அதன்கண் பிறையையும், திருமேனி முழுவதும் திருநீற்றுப் பூச்சையும் இடையில்
ஆடையாகக் கீள் உடையையும் கொண்ட உருவம் உடையவனாய்
இருப்பது ஏனோ?
கு-ரை: இது மாதர் நீராடுவதால் வாளைமீன்
துள்ளும் பொய்கைக் கரையிலுள்ள கோலக்காவிலுள்ளவன்,
சடையும் பிறையும்
|