பக்கம் எண் :

46பதிப்புரை(முதல் திருமுறை)


முறை வெளிவந்தது.

பண்முறைத் தேவாரம் மக்கட்குக் கிட்டாமையின், திருவேங்கட நாயுடு அவர்களால் பார்வையிடப்பெற்றுச் சண்முக முதலியார் அவர்களால் சென்னை ஆறுமுக விலாச அச்சுக் கூடத்தில் கி.பி. 1898 இல் பண்முறைத் தேவார அடங்கன் முறை மூன்றாம் முறையாக வெளியிடப் பெற்றது.

பத்தாண்டுகளுக்குள் மீண்டும் பண்முறைத் தேவார அடங்கன் முறை தேவை ஏற்பட, அது, திருமுறை வரலாறு, மூவர் சரித்திரக் குறிப்புரை முதலியவற்றுடன், திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை அவர்களால் பார்வையிடப்பெற்று, எஸ். பி. ராஜாராம் அவர்களின் ஸன் ஆப் இந்தியா அச்சியந்திரசாலையில் அச்சிட்டு கி.பி. 1906 ஆம் ஆண்டு ஜுலைத் திங்களில் வெளிவந்தது.

இதனை மீண்டும் நமச்சிவாய முதலியார் கி.பி. 1917 ஆம் ஆண்டு நிரஞ்சன விலாச அச்சியந்திர சாலையில் வெளியிட்டார்.

பங்காளம் அப்புப் பிள்ளை அவர்கள் சென்னை நேஷனல் அச்சுக்கூடத்தின் வாயிலாக கி.பி.1907 ஆம் ஆண்டு தேவாரப் பதிப்பொன்றை வழங்கினார்.

நாகலிங்க முதலியார், சென்னை ஆதிமூலம் செட்டியார் ஆகியோரால் கி.பி. 1908 இல் கலாரத்னாகர அச்சுக் கூடத்தில் சுந்தரர் தேவாரம் செய்யுள் முதற்குறிப்பு அகராதியுடன் வெளியிடப் பெற்றது. தேவாரத்தைப் பொறுத்தவரையில் இப்பதிப்பிலேயே அகராதியுடன் நூல் வெளியிடும் மரபு தொடங்கியது எனலாம்.

யாழ்ப்பாணத்து வண்ணைநகர்ச் சுவாமிநாத பண்டிதர் அவர்கள், பல்லாண்டுகள் திருமுறை ஏட்டுப் பிரதிகளை ஆய்வு செய்து, பாடபேதங்கள், புதிய பல செய்திகள் என்பவற்றுடன் சென்னை வித்தியாநுபாலன அச்சுக்கூட வாயிலாக வெளியிட்ட, தலமுறை மூவர் தேவார அடங்கன்முறைத் தொகுதி, கி.பி. 1911 ஆம் ஆண்டு மக்களுக்குக் கிட்டுவதாயிற்று.

சைவநன்மக்கள் பொருள் உணர்வோடு தேவாரத்தைப் பயில வேண்டும் என்ற பெருங்கருணையால் காஞ்சிபுரம் மகா வித்துவான் ஸ்ரீமத் இராமானந்த யோகிகள் பண்முறையில் சுந்தரர் தேவாரத்திற்குப் பதவுரை, பொழிப்புரை, கருத்துரை, விசேடவுரை என்பனவற்றை