பக்கம் எண் :

 24. சீகாழி466


256. கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடுங்
கல்ல வடத்தை யுகப்பார் காழியார்
அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம்
பல்ல விடத்தும் பயிலும் பரமரே. 7

257. எடுத்த வரக்க னெரிய விரலூன்றிக்
கடுத்து முரிய வடர்த்தார் காழியார்
எடுத்த பாடற் கிரங்கு மவர்போலாம்
பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே. 8

__________________________________________________

போலும் என்கின்றது. அங்கண் அரவம் ஆட்டுமவர் - அவ்விடத்துப் பாம்பை அவயவங்களிலணிந்து ஆட்டுவர்.

7. பொ-ரை: எல்லா இடங்களிலும் நிறைந்து விளங்கும் பரமராகிய பெருமானார், முல்லை நிலத்துக்குரிய ஆன் ஏற்றை ஊர்ந்து அதன் முன்னே பூத கணங்கள் வளைந்து நெளிந்து ஆடிச்செல்லக் கல்லவடம் என்னும் பறையை விரும்புபவர். அக்காழியார் தம்மை அறிந்து போற்றுநர் அல்லாதார் இடங்களிலும் தோன்றி அருள் வழங்கும் இயல்பினர்.

கு-ரை: கொல்லைவிடை - முல்லைக் கடவுளாகிய திருமாலாகிய விடை. கல்லவடம் - ஒருவகைப்பறை.

அல்லவிடத்தும் - தம்மையறிந்து போற்றற்குரியர் அல்லாத விடத்தும். பல்லவிடத்தும் - உயர்வு தாழ்வு கருதாதே பலவிடங்களிலும்.

8. பொ-ரை: பொடியாக அமைந்த திருநீற்றைப் பூசும் தூயவராகிய பெருமானார், கயிலைமலையை எடுத்த இராவணனின் முடிகள் நெரியுமாறு தம் கால் விரலை ஊன்றிச் சினந்து அவனது ஆற்றல் அழியுமாறு அடர்த்தவர். அக்காழியார் இராவணன் எடுத்த பாடலாகிய சாமகானத்துக்கு இரங்கி அருள் செய்தவராவார்.

கு-ரை: இராவணனை நெரித்த காழியார் கானத்திற்கிரங்கும் கருணையாளர் போலாம் என்கின்றது. கடுத்து - கோபித்து. பாடல் - சாமகானம்.