பக்கம் எண் :

467திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


258. ஆற்ற லுடைய வரியும் பிரமனுந்
தோற்றங் காணா வென்றிக் காழியார்
ஏற்ற மேறங் கேறு மவர்போலாங்
கூற்ற மறுகக் குமைத்த குழகரே. 9

259. பெருக்கப் பிதற்றுஞ் சமணர் சாக்கியர்
கரக்கு முரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த விறைவ ரவர்போலாம்
அருப்பின் முலையாள் பங்கத் தையரே. 10

__________________________________________________

9. பொ-ரை: வாழ்நாளைக் கூறுபடுத்திக் கணக்கிட்டு உயிர்கொள்ளும் இயமன் அஞ்சுமாறு அவனை உதைத்து, மார்க்கண்டேயர்க்கு அருள்செய்த குழகராகிய சிவபிரானார், ஆற்றல் உடைய திருமாலும் பிரமனும் தம் அடிமுடிகள் தோன்றுமிடங்களைக் காணாதவாறு வானுற ஓங்கிய வெற்றியை உடையவராய்க் காழிப்பதியில் எழுந்தருளியுள்ளார். அவர் மிக உயர்ந்த ஆன்ஏற்றில் ஏறி உலா வந்து அருள்பவராவார்.

கு-ரை: கூற்றங்குமைத்த குழகராகிய காழியார் இடபம் ஏறும் கருணையாளர் போலாம் என்கின்றது.

ஆற்றலுடைய என்றது ஆற்றல் இருந்தும் இறைவனைக் காணப் பயன்பெற்றில என்பதைத் தெரிவிக்க. ஏற்றம் ஏறு - உயர்ந்த இடபம்.

10. பொ-ரை: தாமரை அரும்பு போன்ற தனபாரங்களை உடைய உமையம்மையை ஒருபங்காகக் கொண்டுள்ள தலைவராகிய சிவபிரான், உண்மையின்றி மிகப் பிதற்றுகின்ற சமணர் சாக்கியர்களின் வஞ்சக உரைகளைக் கொள்ளாதவராய்க் காழியில் எழுந்தருளியுள்ளார். அவரே இருக்கு வேதத்தில் நிறைந்துள்ள இறைவரும் ஆவார்.

கு-ரை: உமையொருபாகனாகிய காழியார் இருக்கு வேதத்தில் நிறைந்த இறைவர் போலாம் என்கின்றது.

பெருக்கப்பிதற்றும் - உண்மையில்லாமல் மிகப் பிதற்றுகின்ற. கரக்கும் உரை - வஞ்சக உரை. அருப்பின் முலையாள் - அரும்பு போன்ற முலையையுடைய பார்வதி.