பக்கம் எண் :

469திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


25. திருச்செம்பொன்பள்ளி

பதிக வரலாறு :

ஆளுடைய பிள்ளையார் திருமயிலாடுதுறை யென்னும் மாயூரத்தை வணங்கிப் பதிகம்பாடி வழியில் விளநகரை வணங்கித் திருச்செம்பொன் பள்ளியையடைந்தார். அங்கு அணிகிளர் சூலக் கைத்தலப் படை வீரராகிய செம்பொன் பள்ளியாரை வணங்கி ‘மருவார் குழலி’ என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். இப்பதிகத்து மருவார் குழலி என அம்மையின் திருநாமமும், செம்பொன்பள்ளி மேயான் எனச் சுவாமியின் திருநாமமும் அறிவிக்கப்படுகின்றன. ஏழாம் திருப்பாடலில் வரும் ‘கையார் சூலமேந்தும் கடவுளை’ என்பதைச் ‘சூலக் கைத்தலப் படைவீரர்’ எனச் சேக்கிழார் பெருமான் சொல்லிக்காட்டுகிறார்.

பண்: தக்கராகம்

பதிக எண்: 25

திருச்சிற்றம்பலம்

261. மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
திருவார் செம்பொன் பள்ளி மேவிய
கருவார் கண்டத் தீசன் கழல்களை
மருவா தவர்மேன் மன்னும் பாவமே. 1

__________________________________________________

1. பொ-ரை: மணம் பொருந்திய கூந்தலை உடையவளாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாக உடையவராய்த் திருமகள் வாழும் செம்பொன்பள்ளி என வழங்கும் திருத்தலக் கோயிலில் எழுந்தருளிய, கருநீலம் பொருந்திய கண்டத்தை உடைய ஈசன் திருவடிகளை வணங்கி அவற்றைத் தம் மனத்தே பொருந்த வையாதவர்களைப் பாவங்கள் பற்றும்.

கு-ரை: இது செம்பொன்பள்ளி ஈசன் கழல்களை அடையாத வரைப் பாவம் அடையும் என்கின்றது. மருவார்குழலி, இத்தலத்து அம்மையின் திருநாமம். வடமொழியில் சுகந்தவனப் பாவை என வழங்குவர். கருவார்கண்டம் - நீலகண்டம். இறைவன் அடைந்தார் இன்னல் தீர்க்க அடையாளமாக நீலகண்டத்தைக் காட்டியும் அவன் கழல்களை மருவாதவரைப் பாவம் மருவும் என்ற நயந்தோன்ற நின்றது.