பக்கம் எண் :

471திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


எழிலார் புரிபுன் சடையெம் மிறைவனைத்
தொழுவார் தம்மேற் றுயர மில்லையே. 4

265. மலையான் மகளோ டுடனாய் மதிலெய்த
சிலையார் செம்பொன் பள்ளி யானையே
இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல்
நிலையா வணங்க நில்லா வினைகளே. 5

266. அறையார் புனலோ டகிலும் வருபொன்னிச்
சிறையார் செம்பொன் பள்ளி மேவிய
கறையார் கண்டத் தீசன் கழல்களை
நிறையால் வணங்க நில்லா வினைகளே. 6

__________________________________________________

கு-ரை: தொழுவார்க்குத் துயரமில்லை என்கின்றது. துயரம் இல்லாமைக்கு இரண்டு ஏது; ஒன்று பகையும் பிணியும் தடுத்தல். மற்றொன்று இன்பம் பெருக்கல். இவ்விரண்டையும் பெற இறைவன் மழுவாள் ஏந்திப் பகையும் பிணியும் தடுத்தும், மாதோர் பாகமாய்த் தான் இருந்து இன்பம் பெருக்கியும் காக்கின்றார் என்று உணர வைத்தவாறு.

5. பொ-ரை: மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு உடனாய் விளங்குபவனும், அசுரர்களின் மும்மதில்களை எய்தழித்த மலை வில்லை உடையவனுமாகிய செம்பொன் பள்ளியில் விளங்கும் சிவபிரானையே, இலைகளையும் மலர்களையும் கொண்டு இரவிலும் நண்பகலிலும் மனம் நிலைத்து நிற்குமாறு வணங்குவார் மேல் வினை நில்லா.

கு-ரை: இலையும் பூவுங்கொண்டு இரவும் பகலும் வணங்குவார்க்கு வினைகள் இல்லை என்கின்றது. மதில் எய்து மறத்தைக் காட்டினாலும் அதுவும் கருணையாய் முடிந்தது என்பார் மலையான் மகளோடுடனாய் மதில் எய்த என்றார். எல்லி - இரவு. நிலையா வணங்க - வேறொன்றிலும் மனம் சென்று பற்றாது இறைவனிடத்தேயே நிலைத்து வணங்க.

6. பொ-ரை: பாறைகளிற் பொருந்திவரும் நீரில் அகில் மரங்களையும் அடித்துவரும் பொன்னியாற்றின் கரையில் அமைந்த செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய விடக்கறை பொருந்திய கண்டத்தை உடைய ஈசன் திருவடிகளை மன ஒருமைப்பாட்டோடு வணங்க வினைகள் நில்லா.