பக்கம் எண் :

508திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


332. பலவும் பயனுள் ளனபற் றுமொழிந்தோம்
கலவும் மயில்கா முறுபே டையொடாடிக்
குலவும் பொழில்சூழ்ந் தகுரங் கணின்முட்டம்
நிலவும் பெருமா னடிநித் தல்நினைந்தே. 6

333. மாடார் மலர்க்கொன் றைவளர் சடைவைத்துத்
தோடார் குழைதா னொருகால திலிலங்கக்
கூடார் மதிலெய் துகுரங் கணின்முட்டத்
தாடா ரரவம் மரையார்த் தமர்வானே. 7

__________________________________________________

இனிக்குறையக்கூடாத அளவு குறைந்த பிறைமதி. ஒண்சுடரான் - ஒள்ளிய சோதிவடிவன்.

6. பொ-ரை: தோகைகளை உடைய ஆண் மயில்கள் தாம் விரும்பும் பெண் மயில்களோடு கூடிக் களித்தாடும் பொழில்களால் சூழப்பட்ட குரங்கணில்முட்டத்தில் உறையும் பெருமான் திருவடிகளை நாள்தோறும் நினைந்து உலகப் பொருள்கள் பலவற்றிலும் இருந்த பற்றொழிந்தோம்.

கு-ரை: இது இறைவனடியை நித்தலும் நினைந்ததன் பயன் உள்ள பலவற்றிலும் இருந்த பற்றும் ஒழிந்தோம் என்கின்றது. பயன் உள்ளன - பொறிகட்கும் பிறவற்றிற்கும் பயன்படுவனவாகிய தனுகரண புவனபோகங்கள். கலவம் - தோகை. ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு‘ என்ற குறட்கருத்து அமைந்திருத்தல் காண்க.

7. பொ-ரை: சிவபிரான் பொன்னையொத்த கொன்றை மலர் மாலையைச் சடைமீது அணிந்து, காதணியாகிய குழை ஒரு காதில் இலங்கத் திரிபுரத்தை எரித்தழித்து, ஆடும் பாம்பை இடையிலே வரிந்துகட்டிக் குரங்கணில்முட்டத்தில் எழுந்தருளியுள்ளான்.

கு-ரை: கொன்றையணிந்து குழையுந்தோடுங் காதில் தாழ, திரிபுரமெரித்த பெருமான் குரங்கணில் முட்டத்து அமர்வான் என இறைவனுடைய மாலை அணி வீரம் இவற்றைக் குறிப்பிக்கின்றது. மாடு ஆர்மலர்க் கொன்றை - பொன்னை ஒத்த நிறமுடைய கொன்றைமலர். கூடார் - பகைவர். ஆடு ஆர் அரவம் - ஆடுதலைப் பொருந்திய அரவம்.