பக்கம் எண் :

 32. திருவிடைமருதூர்509


334. மையார் நிறமே னியரக் கர்தங்கோனை
உய்யா வகையா லடர்த்தின் னருள்செய்த
கொய்யார் மலர்சூ டிகுரங் கணின்முட்டம்
கையாற் றொழுவார் வினைகாண் டலரிதே. 8

335. வெறியார் மலர்த்தா மரையா னொடுமாலும்
அறியா தசைந்தேத் தவோரா ரழலாகும்
குறியா னிமிர்ந்தான் றன்குரங் கணின்முட்டம்
நெறியாற் றொழுவார் வினைநிற் ககிலாவே. 9

__________________________________________________

8. பொ-ரை: கரிய மேனியை உடைய அரக்கர் தலைவனாகிய இராவணனைப் பிழைக்க முடியாதபடி அடர்த்துப் பின் அவனுக்கு இனிய அருளை வழங்கியவனும், அடியவர் கொய்தணிவித்த மலர் மாலைகளுடன் குரங்கணில்முட்டத்தில் எழுந்தருளியுள்ளவனுமாகிய சிவபெருமானைக் கைகளால் தொழுபவர் வினைப்பயன்களைக் காணுதல் இலராவர்.

கு-ரை: இத்தலத்தைத் தொழுவார் வினைகாண்டல் அரிது என்கின்றது.

மையார்மேனி - கரியமேனி. அரக்கன் - இராவணன். உய்யா வகையால் - தப்பாதவண்ணம். கொய் ஆர் மலர் - கொய்தலைப் பொருந்திய மலர். வினை - வினைப்பயனாகிய துன்ப இன்பங்களை.

9. பொ-ரை: மணம் கமழும் தாமரை மலரில் உறையும் நான்முகனும், திருமாலும் அடிமுடி அறிய முடியாது வருந்தி வணங்க அழல் உருவாய் ஓங்கி நின்றருளிய சிவபிரான் விளங்கும் குரங்கணில் முட்டத்தை முறையாக வணங்குவார் வினைகள் இலராவர்.

கு-ரை: இது தொழுவார்வினை நிற்கும் ஆற்றல் இல்லாதன என்கின்றது.

வெறி - மணம். அறியாது அசைந்து - முதற்கண் இறைவன் பெருமையையறியாமல் சோம்பி இருந்து. ஏத்த - பின்னர் அறிந்து துதிக்க. ஓர் ஆர் அழலாகம் குறியான் - ஒப்பற்ற நெருங்குதற்கரிய அழலாகிய திருவுருவையுடையவன். நெறி - ஆகமவிதி.