பக்கம் எண் :

510திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


336. கழுவார் துவரா டைகலந் துமெய்போர்க்கும்
வழுவாச் சமண்சாக் கியர்வாக் கவைகொள்ளேல்
குழுமின் சடையண் ணல்குரங் கணின்முட்டத்
தெழில்வெண் பிறையா னடிசேர் வதியல்பே. 10

337. கல்லார் மதிற்கா ழியுண்ஞான சம்பந்தன்
கொல்லார் மழுவேந் திகுரங் கணின்முட்டம்
சொல்லார் தமிழ்மா லைசெவிக் கினிதாக
வல்லார்க் கெளிதாம் பிறவா வகைவீடே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

10. பொ-ரை: தோய்க்கப்பட்ட துவராடையை உடலிற் போர்த்துத் திரியும் புத்தர், தம்கொள்கையில் வழுவாத சமணர் ஆகியோர் உரைகளைக் கொள்ளாதீர். மின்னல்திரள் போலத்திரண்டு உள்ள சடைமுடியை உடையவனும், அழகிய வெண்பிறையை அணிந்தவனும் ஆகிய குரங்கணில் முட்டத்து இறைவன் திருவடிகளைச் சென்று வணங்குவதே நம் கடமையாகும்.

கு-ரை: இத்தலத்துள்ள இறைவனடி சேர்வதே இயல்பு என்கின்றது. கழுவார் - உடையைத் தோய்த்து அலசாதவராய், வழுவாச் சமண் - தம் கொள்கையில் வழுவாத சமணர். குழு மின்சடை - கூட்டமாகிய மின்னலை ஒத்த சடை.

11. பொ-ரை: கருங்கல்லால் இயன்ற மதில்களால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், கையில் கொல்லனது தொழில் நிறைந்த மழுவாயுதம் ஏந்திய குரங்கணில் முட்டத்து இறைவன்மீது பாடிய சொல்மாலையாகிய இத்திருப்பதிகத்தைச் செவிக்கு இனிதாக ஓதி ஏத்த வல்லார்க்குப் பிறவா நெறியாகிய வீடு எளிதாகும்.

கு-ரை: இப்பதிகத்தைச் செவிக்கினிதாகச் சொல்லவல்லவர்களுக்கு வீடு எளிது என்கின்றது. கல் ஆர் மதில் - மலையை ஒத்த மதில். பிறவாவகை வீடு எளிதாம் எனக் கூட்டுக. கொல்லார்மழு - கொற்றொழில் நிறைந்த மழு (திருக்கோவையார் - 231).