பக்கம் எண் :

 32. திருவிடைமருதூர்511


32. திருவிடைமருதூர்

பதிக வரலாறு:

திருஞானசம்பந்தப் பிள்ளையார், திருநாகேச்சரத்து இனிதமரும் செங்கனகத் தனிக்குன்றை வணங்கி, நாகநாதப் பெருமானின் பிணிதீர்க்கும் பெருங்கருணையைப் போற்றித் திருவிடைமருதூருக்கு வழிக்கொள்கின்றவர் ‘ஓடேகலன்‘ என்னும் இத்திருப்பதிகத்தையருளிச் செய்தார்கள். போகும் போது அளவிலாப் பெருமகிழ்ச்சி திருவுள்ளத்தெழ ‘என்னை யாளுடையபிரான் உறைகின்ற இடைமருது ஈதோ’ என்று அமைத்து இன்னிசைப்பதிகம் அருளிக்கொண்டே இடைமருதிற்கு எழுந்தருளினார்கள்.

பண் : தக்கராகம்

பதிக எண்: 32

திருச்சிற்றம்பலம்

338. ஓடே கலணுண் பதுமூ ரிடுபிச்சை
காடே யிடமா வதுகல் லானிழற்கீழ்
வாடா முலைமங் கையுந்தா னுமகிழ்ந்
தீடா வுறைகின் றவிடை மருதீதோ. 1

__________________________________________________

1. பொ-ரை: உண்ணும் பாத்திரம் பிரம கபாலமாகும். அவர் உண்ணும் உணவோ ஊர் மக்கள் இடும் பிச்சையாகும், அவர் வாழும் இடமோ இடுகாடாகும். அத்தகைய சிவபிரான் கல்லால் மரநிழற்கீழ் நன்முலைநாயகியும் தானுமாய் மகிழ்ந்து பெருமையோடு விளங்கும் திருத்தலமாகிய இடைமருது இதுதானோ?

கு-ரை: ஓடு எடுத்து ஊர்ப்பிச்சை ஏற்றுக் காடிடங்கொள்ளும் பெருமான் பெருமுலைநாயகியோடு எழுந்தருளும் இடைமருதீதோ என்று வினாவுகிறது இப்பதிகம்.

ஓடு - பிரமகபாலம். வாடாமுலை மங்கை என்பது பெருமுலைநாயகி என்னும் அம்மையின் திருநாமத்தைக் குறித்தது. ஈடா - பெருமையாக.