பக்கம் எண் :

 32. திருவிடைமருதூர்513


342. வாசங் கமழ்மா மலர்ச்சோ லையில்வண்டே
தேசம் புகுந்தீண் டியொர்செம் மையுடைத்தாய்ப்
பூசம் புகுந்தா டிப்பொலிந் தழகாய
ஈச னுறைகின் றவிடை மருதீதோ. 5

343. வன்புற் றிளநா கமசைத் தழகாக
என்பிற் பலமா லையும்பூண் டெருதேறி
அன்பிற் பிரியா தவளோ டுமுடனாய்
இன்புற் றிருந்தான் றனிடை மருதீதோ. 6

__________________________________________________

தந்தையாகிய சிவபிரான் உறைகின்ற இடைமருதூர் இதுதானோ?

கு-ரை: அந்தம் அறியாத வேதமுதல்வன் எனக் கூட்டுக. அருங்கலம் உந்தி - அரிய ஆபரணங்களைக் கரையில் வீசி.

5. பொ-ரை: மணம் கமழும் சிறந்த மலர்களை உடையசோலைகளில் வண்டுகளைக் கொண்டதும், உலக மக்கள் பலரும் கூடிச் செம்மையாளராய்த் தைப்பூசத் திருநாளில் நீராடி வணங்குவதும், பொலிவும் அழகும் உடையவனாய் ஈசன் எழுந்தருளி விளங்குவதுமான இடைமருது என்னும் தலம் இதுதானோ?

கு-ரை: வண்டு புகுந்து ஈண்டி செம்மையுடைத்தாய் இருக்க, பூசம்புகுந்து ஆடி அழகாய ஈசன் உறைகின்ற இடைமருது என வினை முடிவுசெய்க.

தேசம் புகுந்து - பல இடங்களிலும் சுற்றி, செம்மை உடைத்தாய் - குரலின் இனிமை படைத்து. இத்தலத்தில் தைப்பூசத் திருநாள் அன்று இறைவன் காவிரியில் தீர்த்தங்கொள்வர்.

6. பொ-ரை: வலிய புற்றுக்களில் வாழும் இளநாகங்களை இடையிலே அழகாகக் கட்டிக் கொண்டு, எலும்பால் இயன்ற மாலைகள் பலவற்றையும் அணிகலன்களாகப் பூண்டு, அன்பிற் பிரியாத உமையம்மையோடும் உடனாய் எருதேறிச் சிவபிரான் இன்புற் றுறையும் இடைமருது என்பது இதுதானோ?

கு-ரை: வல்புற்று இளநாகம் - வலிய புற்றில் வாழும் இளநாகம் அவைகளை அவயவங்களிலே அணியாகக் கட்டி. அன்பில் பிரியாதவள் - பிரியாவிடையாகிய பார்வதி.