பக்கம் எண் :

514திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


344. தேக்குந் திமிலும் பலவுஞ் சுமந்துந்திப்
போக்கிப் புறம்பூ சலடிப் பவருமால்
ஆர்க்குந் திரைக்கா விரிக்கோ லக்கரைமேல்
ஏற்க விருந்தான் றனிடை மருதீதோ. 7

345. பூவார் குழலா ரகில்கொண் டுபுகைப்ப
ஓவா தடியா ரடியுள் குளிர்ந்தேத்த
ஆவா வரக்கன் றனையாற் றலழித்த
ஏவார் சிலையான் றனிடை மருதீதோ. 8

__________________________________________________

7. பொ-ரை: தேக்கு, வேங்கை, பலா ஆகிய மரங்களைச் சுமந்து வந்து இருகரைகளிலும், அம்மரங்களை எடுத்து வீசி, ஆரவாரித்து வரும் அலைகளையுடையதாய காவிரி நதியின் அழகிய கரைமீது சிவபெருமான் பொருந்த உறையும் இடைமருது என்னும் தலம் இதுதானோ?

கு-ரை: திமில் - வேங்கைமரம். பல - பலாமரம். புறம் போக்கி - இம்மரங்களை இருகரைமருங்கும் எடுத்துவீசி.

பூசல் அடிப்ப - கரையுடன் மோத. ஆல் - அசை. ஆர்க்கும் திரை - ஆரவாரிக்கின்ற அலை. ஏற்க - பொருந்த.

8. பொ-ரை: மலர் குடிய கூந்தலை உடைய மங்கல மகளிர் அகில் தூபம் இட, அடியவர் இடையீடின்றித் திருவடிகளை மனம் குளிர்ந்து ஏத்த, கண்டவர் ஆஆ என இரங்குமாறு இராவணனது ஆற்றலை அழித்த, அம்பு பொருத்தற்கேற்ற மலைவில்லைக் கையில் கொண்ட, சிவபெருமானின் இடைமருது என்னும் தலம் இதுதானோ?

கு-ரை: இது மகளிரும் அடியாரும் அவரவர்கள் பரிபாகத்திற்கேற்ப வழிபடுகின்றார்கள் என்கின்றது. ஓவாது - இடைவிடாமல் ஆவா; இரக்கக் குறிப்பிடைச்சொல்.

ஏ ஆர் சிலை - பெருக்கத்தோடு கூடிய கைலைமலை ‘ஏபெற்றாகும்‘ என்பது தொல். சொல். உரி. (பெற்று - பெருக்கம் ‘ஏகல் அடுக்கம்‘ என்னும் நற்றிணையும் (116) காண்க.