391. துவரா டையர்தோ லுடையார்கள்
கவர்வாய் மொழிகா தல்செய்யாதே
தவரா சர்கள்தா மரையானோ
டவர்தா மணையந் தணையாறே. 10
392. கலையார் கலிக்கா ழியர்மன்னன்
நலமார் தருஞா னசம்பந்தன்
அலையார் புனல்சூ ழுமையாற்றைச்
சொலுமா லைவல்லார் துயர்வீடே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
10. பொ-ரை: துவராடை தரித்த புத்தர்,
ஆடையின்றித் தோலைக் காட்டும் சமணர் ஆகியவரின்
மாறுபட்ட வாய்மொழிகளை விரும்பாது, தவத்தால் மேம்பட்டவர்கள்,
பிரமன் முதலிய தேவர்களோடு வந்தணைந்து வழிபடும்
தலம் திருவையாறாகும். அதனைச் சென்று வழிபடுமின்.
கு-ரை: கவர்வு - கபடம். தவராசர்கள்
- தவத்தான் மிக்கமுனிவர்கள். தாமரையான் என்றது
பிரமனை.
11. பொ-ரை: கலைவல்லவர்களின்
ஆரவாரம் மிக்க சீகாழிப் பதியில் உள்ளார்க்குத்
தலைவனாகிய நன்மை அமைந்த ஞானசம் பந்தன் அலைளை
உடைய காவிரியால் சூழப்பட்ட திருவையாற்றைப்
போற்றிப் பாடிய இத்தமிழ் வல்லவர்களின் துயர்கள்
நீங்கும்.
கு-ரை: இது ஐயாற்றைப்பற்றிய இம்மாலையைச்
சொல்ல வல்லார் துன்பத்தினின்று வீடுபெறுவர் என்கின்றது.
கலை - கலை ஞானங்கள். கலி - ஒலி.
|