பக்கம் எண் :

 37. திருப்பனையூர்539


37. திருப்பனையூர்

பதிக வரலாறு:

திருவாரூரை வணங்கிவருகின்ற திருஞானசம்பந்தப் பெருமான், யானையையுரித்துப் போர்த்த பெருமான் எழுந்தருளிய திருப்பனையூரை வணங்கி, ‘அரவச் சடை’ என்னும் வேதப்பொருள் நிறைந்த இசைப்பதிகமாகிய இதனை அருளிச் செய்தார்கள்.

பண்: தக்கராகம்

பதிக எண்: 37

திருச்சிற்றம்பலம்

393. அரவச் சடைமேன் மதிமத்தம்
விரவிப் பொலிகின் றவனூராம்
நிரவிப் பலதொண் டர்கள்நாளும்
பரவிப் பொலியும் பனையூரே. 1

394. எண்ணொன் றிநினைந் தவர்தம்பால்
உண்ணின் றுமகிழ்ந் தவனூராம்
கண்ணின் றெழுசோ லையில்வண்டு
பண்ணின் றொலிசெய் பனையூரே. 2

__________________________________________________

1. பொ-ரை: சடைமுடிமேல் அரவம், மதி, ஊமத்தம் மலர் ஆகியன கலந்து விளங்குமாறு அணிந்த சிவபெருமானது தலம் தொண்டர்கள் பலரும் கலந்து நாள்தோறும் வணங்கி மகிழ்வுறும் திருப்பனையூராகும்.

கு-ரை: இது, சடைமேல் மதியும் ஊமத்தமும் கலந்து விளங்குகின்ற இறைவனூர் பனையூர் என்கின்றது. மத்தம் - ஊமத்தம். நிரவி - கலந்து. பரவி - வணங்கி.

2. பொ-ரை: மனம் ஒன்றி நினைந்த அடியார்களின் உள்ளத்துள்ளே இருந்து அவர்தம் வழிபாட்டை ஏற்று மகிழ்கின்ற சிவபெருமானது தலம், தேன் பொருந்திய மலர்களோடு உயர்ந்துள்ள சோலைகளில் வண்டுகள் பண்ணொன்றிய ஒலி செய்யும் பனையூராகும்.