பக்கம் எண் :

540திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


395. அலரும் மெறிசெஞ் சடைதன்மேல்
மலரும் பிறையொன் றுடையானூர்
சிலரென் றுமிருந் தடிபேணப்
பலரும் பரவும் பனையூரே. 3

396. இடியார் கடனஞ் சமுதுண்டு
பொடியா டியமே னியினானூர்
அடியார் தொழமன் னவரேத்தப்
படியார் பணியும் பனையூரே. 4

__________________________________________________

கு-ரை: மனம் ஒன்றி நினைக்கும் அடியார்களிடத்து உள்நின்று மகிழும் இறைவனூர் பனையூர் என்கின்றது. எண் -எண்ணம். ஒன்றி - விஷய சுகங்களில் சென்று பற்றாது திருவடியிலேயே பொருந்தி. மகிழ்ந்தவன் - தான்மகிழ, தன்னைச்சார்ந்த ஆன்மாவும் மகிழுமாதலின் மகிழ்வித்தவன் என்னாது மகிழ்ந்தவன் என்றார்; மகிழ்தற்குரிய சுதந்திரமும் ஆன்மாவுக்கு இல்லை என்றபடி. கள் நின்று - தேன் பொருந்தி.

3. பொ-ரை: விளங்கும் எரிபோலச் சிவந்த சடைமுடிமீது வளரும் பிறையொன்றை உடைய சிவபெருமானது ஊர், அடியவர்களில் சிலர் என்றும் இருந்து திருவடிகளைப் பரவிப் பூசனை செய்து போற்றவும், பலர் பலகாலும் வந்து பரவ விளங்கும் திருப்பனையூராகும்.

கு-ரை: பிறையணிந்த பெருமானூர் பனையூர் என்கின்றது. எறி - அர்ச்சிக்கப்படுகின்ற. மலரும் பிறை - வளரும் பிறை. சிலர் - அணுக்கத்தொண்டர்களாகிய அடியார்கள். பலர் - வழிபடும் அடியார்கள்.

4. பொ-ரை: கரைகளை மோதுதல் செய்யும் கடலிடைத் தோன்றிய நஞ்சை அமுதாக உண்டு, மேனி மீது திருநீற்றுப் பொடியை நிரம்பப் பூசிய சிவபெருமானது ஊர், அடியவர்கள் தொழ, மன்னவர்கள் ஏத்த உலகில் வாழும் பிற மக்கள் பணியும் திருப்பனையூராகும்.

கு-ரை: இது, நீறுபூசிய இறைவனூர் பனையூர் என்கின்றது.